Wednesday, July 21, 2010

பிரஹஸ்பதி

பிரம்மாவின் மூன்று குழந்தைகளில் அங்கிரஸ முனிவரும் ஒருவர். அங்கிரஸருக்கு பிரஹத் ஜோதிஷன், பிரஹத் கீர்த்தி, பிரஹத் பிரம்மன், பிரஹத் மனஸன், பிரஹத் மந்த்ரன், பிரஹத் பாஸன், பிரஹஸ்பதி என்ற ஏழு புத்திரர்களும் பானுமதி என்ற பெண்ணும் பிறந்தனர்.
இவர்களில் ஏழாவதாகப் பிறந்த பிரஹஸ்பதிக்கு ஒரு முன் கதை உண்டு.
ஒரு சமயம் அக்னி தேவன் தன் பணியில் சலிப்படைந்து காட்டுக்குச் சென்று விட்டதால், யாகங்கள் நடப்பது தடைப்பட்டு, அதனால் மழை பெய்யாமல் பூமி வறண்டு போனது. 'இந்த நிலை இப்படியே நீடித்தால் பல பிரச்னைகள் உருவாகும்' என்று நினைத்த அங்கிரஸர், தானே அக்னியின் பணியைச் செய்ய முன்வந்து, செய்யவும் துவங்கினார். இதைக் கண்டு மனம் வருந்திய அக்னி, அங்கிரஸரிடம் வந்து தன் வேலையைத் தன்னிடமே திருப்பித் தந்து விடும்படிக் கேட்க, அதை அவரிடமே தந்துவிட்டார் அங்கிரஸர்
ஆனாலும் அத்தனை நாட்களாக அங்கிரஸரே அக்னியின் பணிகளைச் செய்து வந்ததால் 'ஹவ்யவாகன்' (அக்னியில் இடப்படும் அவிர்பாகத்தை தேவர்களுக்கு எடுத்துச் செல்லும் தூதன்) என்ற பெயரைப் பெற்று விட்டார். தன்னுடைய பெயர் மறைந்து விட்டதால் மீண்டும் அங்கிரஸரிடமிருந்தே புதுப் பெயர் பெற்று விடுகிறேன் என்று சொல்லி அவருக்கே மகனாகப் பிறந்தார் அக்னி தேவன். அந்த மகன்தான் பிரஹஸ்பதி. பிறகு அவர், தாரா என்ற பெண்ணை மணந்து கொண்டு விஸ்வஜித், விஸ்வபுக், சம்யூ, நிச்யவன், படபாக்னி, ஸ்விஷ்டக்குதன் என்னும் ஆறு அக்னிகளையும் ஸ்வாஹா என்ற பெண்ணையும் உருவாக்கினார்.
பிரஹஸ்பதி கல்வி, கேள்விகளில் வல்லவராக விளங்கினார். அவருடைய உயர்ந்த அறிவைக் கண்டு அதிசயத்த தேவர்கள் அவரையே தங்கள் குருநாதராக ஏற்றுக் கொண்டனர். 'உலகில் நீதி நிலைபெற்று அநீதி அழிய வேண்டும்' என்ற உயரிய நோக்குடன் 'நீதி' என்ற சத்திய நூலை எழுதினார் பிரஹஸ்பதி. அத்தகைய சிறப்பு மிக்க குருவை வழிபட்டு, ஞானம் பெறுவோம்.
பூஜை முறை
குரு பகவானுக்கு உரிய கிழமைகள் திங்கள், வியாழன். ஒரு குழந்தை அறிவோடு விளங்கி நல்வழியில் சிறக்க அதன் ஜென்ம நட்சத்திர நாளிலோ, வியாழக்கிழமையிலோ இந்தப் பூஜையை செய்வது மிகவும் நல்லது. திங்கள் அன்றும் செய்யலாம்.
ஒரு மணைப் பலகையில் மஞ்சள் தூளால் பிரஹஸ்பதி கோலத்தை வரைந்து (பார்க்க படம்), மஞ்சள் நூல் சுற்றிய கலசத்தில் மஞ்சள் நிறத் துணியைச் சுற்றி, வாழை இலையில் அரிசி பரப்பி அதன் மேல் வைக்க வேண்டும். குருவுக்குப் பிடித்த முல்லை மலர், சாமந்தி, வில்வ இலைகளை வைத்துக் கொண்டு, நிவேதனத்துக்குக் கடலை சாதம், தேங்காய், பழம், வெற்றிலை - பாக்கு ஆகியவற்றை தயாராக எடுத்து வைக்கவும். பிள்ளைகள் மிகவும் சிறியவர்கள் எனில், அவர்களுக்காக தாய் அமர்ந்து பூஜை செய்யலாம். ஓரளவுக்கு வளர்ந்தவர்கள் எனில், பிள்ளைகளே செய்யலாம். முதலில் மஞ்சள் விநாயகர் பூஜை..
''ஓம் ஸ்ரீ குருவே நம:
ஓம் ஸ்ரீம் பிரஹஸ்பதயே நம:''

என்று மூன்று முறை சொல்ல வேண்டும். பிறகு,
''ஓம் சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம்
பிரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்தயே!
ஓம் விக்னேஸ்வராய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் கணாத்யட்சாய நம:
ஓம் கணேசாய நம:
ஓம் பாலசந்திராய நம:
ஓம் கணாதிராஜாய நம:
ஓம் மூஷிகவாகனாய நம:
ஓம் கணக்ரீடாய நம:
ஓம் அங்குசதராய நம:
ஓம் ஞான விநாயகாய நம:
ஓம் பாலகணபதியே நம:''

என்று சொல்லி மஞ்சள் அரிசி போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். வெற்றிலை - பாக்கு, பழங்களை நிவேதனம் செய்து விநாயகரை வணங்கி வடக்கே நகர்த்தி வைக்கவும். பிறகு அன்றைய திதி, கிழமை, நட்சத்திரம் சொல்லி, ''ஞான அபிவிருத்தியர்த்தம் ஜென்ம லாப அபிவிருத்தியர்த்தம் உத்யோக லாப சித்தியர்த்தம் பிரஹஸ்பதி-குரு பூஜாம் அத்ய கரிஷ்யே'' என்று சொல்ல வேண்டும்.
இப்போது கையில் மலர்களை எடுத்துக் கொண்டு கைகூப்பியபடி,
''ஸ்வர்ணாஸ்வ ரதமாரூடம் பீதத்வஜ சுசோபிதம்
மேரோ: ப்ரதட்சிணம் ஸம்யக் ஆச்ரந்தம் சுசோபநம்
அபீஷ்ட வரதம் தேவம் ஸர்வக்ஞம் சுரபூஜிதம்
ஸர்வகர்மார்த்த சித்யர்த்தம் ப்ரணமாமி குரும் ஸதா:''

என்று சொல்ல வேண்டும். பிறகு,
''ஓம் ஸ்ரீகுருவே போற்றி!
ஓம் ஸ்ரீகுணநிதியே போற்றி!
ஓம் காப்பவரே போற்றி!
ஓம் ஜய மூர்த்தியே போற்றி
ஓம் சித்திரப் பிரியரே போற்றி
ஓம் இஷ்டம் தருபவரே போற்றி
ஓம் தேவகுருவே போற்றி
ஓம் வாக்பதியே போற்றி
ஓம் தயை உள்ளவரே போற்றி
ஓம் தனம் தருவோனே போற்றி
ஓம் வாழ்வொளி
தருவோனே போற்றி
ஓம் பலத்தின் உருவே போற்றி
ஓம் பொன் மேனியனே போற்றி
ஓம் மஞ்சள் நிறத்தவனே போற்றி
ஓம் மங்கள மூர்த்தியே போற்றி
ஓம் தென்முக வாசனே போற்றி!''

என்று சொல்லிக் கொண்டே ஒவ்வொரு மலராகக் கலசத்துக்குப் போட வேண்டும். அர்ச்சனை முடிந் ததும் படைக்கும் பொருட்களை வைத்துக் கொண்டு ஊதுபத்தி, நெய் தீபம் காட்டி கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும். அடுத்ததாக, மஞ்சள் மலர்களை எடுத்துக் கொண்டு மும்முறை ஆத்ம பிரதட்சணம் செய்து,
''திருவான செல்வம் திரளான மக்கள்
தினந்தந்து காத்த குருவே
மருவான மச்சம் மார்போடு வைத்த
மகிழ்ந்துள வான குருவே
உருவான கல்வி உயர் ஞான வேள்வி
உறைகின்ற தெய்வ குருவே
கருவான காலம் முதலாகக் காக்கும்
கதியானாய் தேவர் குருவே! ஓம் பிரஹஸ்பதியே போற்றி போற்றி!''

என்று சொல்லி கீழே விழுந்து வணங்கி மலர் தூவி, பூஜையை நிறைவு செய்ய வேண்டும். வளரும் பிள்ளைகள் அனைவருக்கும், அறிவும் உயர் வாழ்வும் தருகிற இந்த பூஜையை செய்து, செல்வங்களில் சிறப்பான அறிவுச் செல்வத்தைப் பெற்று மேதைகளாக வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment