Thursday, July 29, 2010

காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?

ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்  இயற்றிய “காயத்ரீ” என்ற நூலில் இருந்து -


காயத்ரி மந்திரம் வருமாறு:


ॐ  भूर्भुवस्सुव:
तत्सवितुर्वरेण्यम्
भर्गो  देवस्य धीमहि ।
धियो यो न: प्रचोदयात् ॥
ஓம் பூர்ப்புவஸ்ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி |
தியோ யோ ந: ப்ரசோதயாத் ||
AUM  bhUrbhuvassuvaH
tat savitur varENyaM
bhargo devasya dhImahi |
dhiyo yo naH prachOdayAt ||


ஓம். யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக.

இது பிரம்ம காயத்ரீ அல்லது சூரிய காயத்ரீ. இதுவே நம் தேசியப் பிரார்த்தனை. இதுவே நம்  தேசிய மந்திரம். பல்லாயிரம் ஆண்டுகளாகக் காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரை இது கையாளப் பட்டு வந்துள்ளது.
ஓம் அல்லது ஓங்காரம் ஓசைகள் அனைத்துக்கும் முதல் காரணம். இது நாதப் பிரம்மம் என்று இயம்பப் பெறுகிறது. பரவஸ்து ஓசை வடிவத்தில் இலங்குகிறது. அகிலாண்டத்தின் இயக்கம் ஓசையை உண்டுபண்ணுகிறது. அந்த ஓசையே ஓங்காரம். ஓங்கார ஓசை இயற்கை முழுவதிலும் ஓவாது ஒலித்துக் கொண்டிருக்கிறது. “ஓவாத சத்தத்து ஒலியே போற்றி” என்று இது போற்றப் படுகிறது. ஓம் என்பது பீஜ மந்திரம். இதன் திரிவுகளாக ஏனைய மந்திரங்கள் வந்துள்ளன. ஓங்காரத்தை உச்சரிப்பதற்கு ஏற்ப மனிதன் மேன்மையுறுகிறான். இயற்கை முழுதுக்கும் பொதுவாக அண்டமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்ற இம்மந்திரத்தை யாரோ சிலர் தான் உச்சரிக்க வேண்டும் என்னும் கட்டுப்பாடு எதற்காக? சுவாசிக்கும் காற்று எல்லார்க்கும் பொதுவாக இருப்பது போன்று இந்த ஓசையும் பொது.
ஓங்காரத்தை உச்சரித்த பிறகே ஏனைய மந்திரங்களை உச்சரிப்பது ஐதிகம். ஏனென்றால் மந்திரங்கள் அனைத்திற்கும் மூலமந்திரமாக அல்லது பீஜமந்திரமாக இருப்பது ஓங்காரம். இதற்கு ஸ்தூல விளக்கம் தருவோம். கணபதி பூஜை பண்ணிய பிறகே ஏனைய தெய்வங்கள் போற்றப் படுகின்றன. கண்பதி ஓங்கார மூர்த்தி. கணபதி வழிபாடு எல்லார்க்கும் சொந்தம். அதினின்றே அவருக்குரிய ஓசை அல்லது மந்திரம் எல்லார்க்கும் பொது என்பது வெளியாகிறது.

பூ: , புவ:, ஸுவ: ஆகிய மூன்று சொற்கள் பூலோகம், புவர்லோகம், ஸ்வர்க்கம் எனப் பொருள்படுகின்றன. இம்மூவுலகங்கள் அகத்திலும் இருக்கின்றன, புறத்திலும் இருக்கின்றன. பண்பாடு அடையாதவர்களுக்கு அம் மூவுலகும் புறத்தில் உள என்னும் கொள்கை ஏற்புடையதாகிறது. அகத்திலேயே அம்மூன்றும் அமைந்துள்ளன என்னும் கொள்கை சிறிது பரிபாகம் அடைந்தவர்களுக்கே விளங்குகிறது.
நம்மிடையே இம்மூவுலகங்களும் எப்படி அமைந்திருக்கின்றன என்று பார்ப்போம். ஜாக்ரதாவஸ்தை, சொப்பனாவஸ்தை, சுஷுப்தி அவஸ்தை ஆகிய மூன்று அவஸ்தைகளும் (நிலைகள்) நம்மிடத்து மாறி மாறி அமைகின்றன. மக்கள் மட்டும் அல்லர்; பறவைகளும், விலங்குகளும் இந்த மூன்று நிலைகளை அனுபவிக்கின்றன.
நனவு அல்லது விழித்திருந்து புறவுலகோடு இணக்கம் வைப்பது ஜாக்ரதாவஸ்தை. நனவு நிலையில் உடல், உள்ளம் ஆகிய இரண்டும் வேலை செய்கின்றன. கனவு என்பது சொப்பனாவஸ்தை. கனவு நிலையில் புறவுலகோடு தொடர்பு வைப்பதில்லை. ஸ்தூல சரீரத்துக்கும் அங்கு வேலையில்லை. அகக் கரணமாகிய மனதே கற்பனையில் ஸ்தூல சரீரத்தையும், புறவுலகத்தையும், அதிலுள்ள உயிர்வகைகளையும் கற்பனை பண்ணிக் கொண்டு வியவகாரம் பண்ணுகிறது.  அந்நிலையில் இருக்கின்ற பொழுது அது யாண்டும் ஜாக்ரதாவஸ்தைக்கு நிகராகத் தோன்றுகின்றது. கனவற்ற உறக்கம் சுஷுப்தி அவஸ்தை எனப்படுகிறது. அந்த அவஸ்தையில் அகவுலகம் இல்லை; புறவுலகம் இல்லை. மனதும் செயலற்றுக் கிடக்கிறது. பிரக்ஞை மட்டும்  தமோகுணத்தால்  [மூவகைக் குணங்களில்  ஒன்றான இருள் இயல்பு] மூடப்பட்டிருப்பது போன்று தன்மயமாய் எஞ்சியிருக்கிறது.
(மூவகைக் குணங்கள் பற்றி அறிய:  பகவத்கீதை - பாரதியார் மொழியாக்கம் அத்தியாயம் 14  பார்க்கவும்)
இம்மூன்று அவஸ்தைகளிலும் நாம் மாறிமாறி இருக்கின்றோம். இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் இந்த மூன்று உலகங்களிலும் சற்று ஏறத்தாழ வசித்து வருகிறோம். இந்த மூன்று அவஸ்தைகளே பூலோகம், புவர்லோகம், ஸுவர்லோகம் என்று இயம்பப் பெறுகின்றன. நாம் எந்த அவஸ்தையில் இருந்தாலும் சரி, அதாவது எந்த லோகத்தில் இருந்தாலும் சரி, இந்த காயத்ரி மந்திரத்தினுடைய கருத்தையுணர்ந்து அதைப் பயன்படுத்திக் கொண்டு வருகிற அளவு ஆன்மிகத் துறையில் முன்னேற்றமடைகிறோம்.
விழித்திருக்கின்ற பொழுது நாம் சுவாசிக்கின்றோம்; கனவு காண்கின்ற பொழுதும் சுவாசிக்கின்றோம்; கனவற்ற உறக்கத்திலும் சுவாசிக்கின்றோம். சுவாசிப்பதை நிறுத்துவதில்லை. நிறுத்தினால் ஒழிந்துபட்டுப் போவோம். நிர்விகல்ப சமாதியில் (அனைத்து உணர்வுகளும் ஒடுங்கும் ஒருமை நிலை) இருப்பவர்கள் மட்டும் சுவாசிக்காதும், அழிந்துபட்டுப் போகாமலும் இருக்கின்றனர். மூன்று அவஸ்தைகளிலும் நிறுத்தாது நாம் சுவாசித்து வருவது போன்று மூன்று அவஸ்தைகளிலும் காயத்ரியில் அடங்கியிருக்கிற கருத்துக்கேற்ப நம்முடைய மனத்தைப் பெரிய நிலையில் வைப்போமானால் அதற்கேற்றவாறு ஆத்ம பரிபாகம் நமக்கு வாய்க்கிறது.

சுஷுப்தி அவஸ்தையில் மனது ஒடுங்குகிறது. ஆதலால் கருத்து ஒன்றும் உருவெடுப்பதில்லை. அந்த அவஸ்தையில் கருத்தை மேல்நிலையில் வைப்பது எங்ஙனம் என்ற கேள்வி எழலாம். சுஷுப்தி அவஸ்தையில் தமோகுணம் ஆதிக்கம் செய்கிறது. தமோகுணத்தில் மூன்று நிலைகள் உண்டு - தமஸில் தமஸ், தமஸில் ரஜஸ், தமஸில் சத்துவம் என அம்மூன்று நிலைகள் விளக்கப் படுகின்றன. ஆத்ம பரிபாகம் அடைந்தவர்கள் தமஸில் சத்துவத்துக்கு மேலோங்க முடியும். அது அறிதுயில் அல்லது யோகநித்திரை எனப்படுகிறது. அந்நிலையை எட்டுகிறவர்கள் காயத்ரீ தத்துவத்தைக் கையாண்டவர்கள் ஆகின்றனர். அந்நிலையை எட்டுவதே குறிக்கோள்.

இனி, ஜாக்ரதாவஸ்தையிலேயே பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் நமக்கு நாம் அமைத்துக் கொள்ள முடியும். உடல் வாழ்க்கையை ஒழுங்காக நடத்துவது பூலோக வாழ்க்கையாகிறது. உள்ளத்தை மேலான எண்ணங்களில் செலுத்துவது புவர்லோகமாகிறது. எண்ணத்தைக் கடவுள் பால் செலுத்துவது ஸ்வர்க்கலோகமாகிறது. அதிகாலையில் எழுந்திருந்து இரவு படுக்கப் போகும் வரையில் வாழ்வாங்கு வாழ்கிற மனிதன் மூவுலகிலும் முறையாக வாழ்ந்தவன் ஆகின்றான்.

இந்த மூன்று லோகங்களிலும் அல்லது மூன்று அவஸ்தைகளிலும் பாரமார்த்திகப் பெருநிலையிலேயே இருந்து பழகுபவன் இரண்டாவது பிறப்பெடுத்தவன் ஆகின்றான். அதற்கு மாறாகப் புலால் உடல் உணர்விலேயே இருந்து புலால் உடலைப் பராமரிப்பதற்காகப் பாடுபடுகிறவன் புலையன் ஆகிறான்.  (ஒப்பிடுக: ”பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்கு” - திருவாசகம்). ஆக, ஒரு மனிதன், இருபிறப்பாளன் ஆவதும் அல்லது ஒரே உடல் பிறவி எடுத்து அதில் கீழ்மையில் உழல்வதும் அந்தந்த ஜீவனுடைய மனபரிபாகத்தை ஒட்டியதாம். இருபிறப்பாளன் அல்லது துவிஜன் யாண்டும் போற்றுதலுக்குரியவன் ஆகின்றான்.
செய்யுள் மயமாக அமைந்துள்ள காயத்ரியில் உள்ள பதங்களை இப்பொழுது உரைநடைக்குரிய பதங்களாகப் பிரித்து அமைப்போம் -

ஓம் தத் ஸவிது: வரேண்யம்
பர்க: தேவஸ்ய தீமஹி |
திய:  ய:  ந: ப்ரசோதயாத் ||
य: ய: - யார், न:  ந: - நம்முடைய, धिय:  திய: அறிவை, प्रचोदयात् ப்ரசோதயாத் - தூண்டுகிறாரோ, तत्  தத் - அந்த, देवस्य தேவஸ்ய - சுடருடைய, सवितु: ஸவிது: கடவுளின், वरेण्यम् வரேண்யம் - மேலான, भर्ग: பர்க: - ஒளியை, धीमहि தீமஹி - தியானிப்போமாக.

ஓம். யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக.

சரியாக அமைந்துள்ள காயத்ரி மந்திரத்தில் பரம்பொருளின் சொரூபத்தை விளக்குவதற்கான பதங்கள் மூன்று அமைந்திருக்கும்.  ஜீவப் பிரயத்தனத்தையும், தெய்வத்தின் அருளையும் விளக்குவதற்கென்று அமைந்துள்ள வினைச்சொற்கள் மூன்று இருக்கும். இப்பேரியல்புகள்  காயத்ரீ மந்திரங்கள் அனைத்துக்குமே பொதுவானவைகள்.

இம்மந்திரத்தில் பரம்பொருளுக்கு விளக்கமாக அமைந்துள்ள மூன்று சொற்களை எடுத்துக் கொள்வோம். ஸவிது: என்னும் சொல் ஸவித்ரு என்னும் சொல்லின் ஆறாம் வேற்றுமையாகும். ஸவித்ரு என்னும் சொல் உயிர்தருகிற, உற்சாகம் ஊட்டுகிற, வாழ்வைச் செப்பனிடுகிற பொருள் என்று சொல்லப் படுகிறது. உலக நடைமுறையில் சூரியன் இச்சொல்லுக்கு இலக்காகிறது. பரதத்துவத்தில் பரமாத்மாவுக்குப் பொருந்தியதாக இப்பதம் அமைகிறது.  ஸவித்ரு  என்னும் சொல்லைப் பெண்பால் ஆக்குகின்ற பொழுது, அது ஸாவித்ரீ என்று சொல்லப் படுகிறது. காயத்ரீ, ஸாவித்ரீ ஆகிய இரண்டு பெயர்களும் சக்தி தெய்வத்துக்கு உரியவைகள் ஆகின்றன. இந்த இரண்டு பெயர்களுள் ஒன்றிற்குப் பதிலாக மற்றொன்றை மொழியுமிடத்து அது இழுக்கு ஆகாது
.
வழிபடுகின்றவர்களுடைய வசதிக்காக ஒரு தெய்வம் ஆண்பாலாகவோ, பெண்பாலாகவோ கருதப் படுகிறது. சிவ என்பது ஆண்பால்; சிவா என்பது பெண்பால். ஸவித்ரு என்பது ஆண்பால்; ஸாவித்ரீ என்பது பெண்பால்.  ஆணாகவோ, பெண்ணாகவோ, அலியாகவோ எப்படி வைத்துக் கொண்டாலும், அது  உயிர்க்கு உயிராய் இருக்கின்ற பரம்பொருள் ஆகிறது  (ஒப்பிடுக: “பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளி சேர், விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி” - திருவாசகம்).

பிரபஞ்சத்துக்கும், ஜீவகோடிகளுக்கும் ஆதாரமாகவும், மூலப் பொருளாகவும், முதல் காரணமாகவும் இருப்பது பரம்பொருள். பரம்பொருளுக்குப் புறம்பாக ஜீவர்களுடைய ஜீவ வியக்தி இல்லை. ஜகத்துக்குத் தோற்றம் என்பது இல்லை. கடலில் தோன்றி, கடலின்மீது அலைகள் உருண்டோடி விளையாடுவது  போன்று ஜகத்தும் ஜீவனும் பரத்தில் தோன்றி பரத்தில் நிலைபெற்றிருக்கின்றன.   (ஒப்பிடுக: தன்னுளே  திரைத்தெழும் தரங்க வெண் தடங்கடல், தன்னுளே திரைத்தெழுந்தடங்குகின்ற தன்மை போல் - நின்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும், நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே :  திருமழிசையாழ்வார், நாலாயிர திவ்யப் பிரபந்தம்).
ஆக, ஜகத்துக்கும் ஜீவனுக்கும் தூண்டுதல் அளிக்கும் பாங்கில் இருக்கிற பரவஸ்து (பரம்பொருள்) ஸவித்ரு என்று சொல்லப் படுகிறது.  கட்புலனாகிற சூரியன் இச்செயலைப் பிரபஞ்ச நிலையில் செய்து வருவதால் சூரிய நாராயணனும் ஸவித்ரு என்று சொல்லப் படுகிறார். ஆனால் இதன் லட்சியார்த்தம் (குறியீட்டுப் பொருள்)  பரமாத்மாவையே குறிக்கிறது.

பரம்பொருளை விளக்குவதற்கு அமைந்துள்ள இரண்டாவது சொல் தேவ: என்பதாகும். தேவஸ்ய என்பது இதன் ஆறாம் வேற்றுமை. தேவ: என்னும் சொல் திவ்யமானவன், பிரகாசமானவன், மேலாம் நிலையில் இருப்பவன் என்றெல்லாம் பொருள் படுகிறது.  பிரகாசத்தோடு கூடியிருப்பது மூலநிலை, யதார்த்த நிலை. பிரகாசத்தை இழந்த நிலை கீழ்மைக்கு வந்துள்ள நிலையாகும். ஜகத்தில் ஜடமாய் இருப்பதெல்லாம் மூலநிலையை விட்டு வழுவிக் கீழ்நிலைக்கு வந்தவைகளாம்.

சான்று ஒன்று எடுத்துக் கொள்வோம். சூரியன் சுயப்பிரகாசம் வாய்ந்தவன். சூரியனிடமிருந்து சிதறி வந்துள்ள பூமியும், சந்திரனும் சுயப்பிரகாசத்தை இழந்தைவைகள். இந்த இரண்டு கோளங்களையும் எடுத்து மீண்டும் சூரியனுள் போட்டால் முன்னிருந்தபடி இவைகளுக்குச் சுயப்பிரகாசம் வந்துவிடும்.  ஜகத் (பருப்பொருள் உலகம்) ஜடமயமாக இருக்கிறது. ஜீவர்களோ ஜடம், சேதனம் (உணர்வு) ஆகிய இரண்டும் கலந்தவைகளாக இருக்கின்றன. பின்பு பரமனோ தனது சுயப் பிரகாசத்தை இழந்துவிடாது யாண்டும் பூரணமாகவே இருப்பவன். தேவ: என்னும் சொல் இப்பேருண்மையை விளக்குகிறது.  பரம்பொருள்  யாண்டும் சுயம்ஜோதி என்பது இதன் பொருள்.

இனி, பரவஸ்துவைக் குறிக்கின்ற மூன்றாவது பதம் பர்க: என்பதாகிறது. பர்க: என்பது ருத்ரனுக்கும், சிவனுக்கும் அமைந்த மற்றொரு பெயர். ருத்ரனாகக் கருதுமிடத்து அழுகையின் வாயிலாக அழுக்கைப் போக்கக் கூடியவன் என்று பொருள்படுகிறது. சிவனாகக் கருதுமிடத்து ஞானப் பிரகாசத்தின் வாயிலாக அக்ஞான இருளைப் போக்குபவன் என்று பொருள்படுகிறது. பரம்பொருளின் சொரூபத்தை ஜீவர்கள் கிரகித்துக் கொள்வதற்கே இந்த அடைமொழி வந்துள்ளது. ஸ்தூல உலகில் சூரியன் தான் இருக்குமிடத்தைத் தானே விளக்குகின்றான்.  தன் வெளிச்சத்தைக் கொண்டு ஏனைய பொருள்களையும் விளக்குகின்றான். அங்ஙனம் ஞான சொரூபியாகிய பரமாத்மா தன்னைத் தானே விளக்குகின்றான். அவனுடைய சன்னிதானத்தின் விசேஷத்தால் ஜகத்தும், ஜீவர்களும் ஞானக்காட்சிக்கு இலக்காகின்றன.

இங்ஙனம் ஸவித்ரு, தேவ:, பர்க: ஆகிய மூன்று சொற்களையும் நாம் உச்சரிக்கின்ற பொழுது, அச்சொற்களுக்கு இலக்காக இருக்கிற பரமாத்மாவையே பாவனை பண்ண வேண்டும். “சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்து” என்பது ஆப்த வாக்கியம். பரமனைப் பற்றிய பதங்களைப் பேசுகின்ற பொழுது, அப்பதங்களின் அடிப்படைக் கருத்து உள்ளத்தில் உதயமாக வேண்டும். அப்பொழுது தான் உச்சரிக்கின்ற மந்திரத்துக்கு வலிவு வருகிறது.

காயத்ரீக்கு இன்றியமையாத மூன்று வினைச்சொற்களை இனி ஆராய்வோம். வரேண்யம் என்பது வர்ணித்தல் எனும் வினையின் விகாரமாம். வரேண்யன் என்னும் சொல் போற்றுதற்குரியது என்றும், வர்ணிப்பதற்குரியது என்றும், விளக்குதற்குரியது என்றும் பொருள்படுகிறது.  தங்கம், வெள்ளி முதலிய தாதுக்களை விளக்க விளக்க அவைகள் சுடர்விடுகின்றன. பரமனை விளக்குவதற்கு ஏற்ப ஜீவாத்மனிடம் ஞானச் சுடர் வளருகிறது. பரமனை விளக்குதலே ஆராதனையாகிறது. பரமனைப் பற்றிய விளக்கத்தைப் “பொருள்சேர் புகழ்” என்று பொய்யாமொழிப் புலவர் வள்ளுவர் போற்றுகிறார். நரஸ்துதி பொருள் சேராத புகழ். பரம்பொருளைப் பற்றிய ஸ்துதி பொருள் சேர்ந்த புகழ். ஆயிரம் ஆயிரமாக சொற்களை வாரிக் கொட்டிப் புகழ்ந்து கொண்டு போனாலும் அதனுடைய புகழுக்கு முடிவில்லை. பரமனை இடையறாது புகழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்னும் கோட்பாட்டை வரேண்யம் என்னும் பதம் விளக்குகிறது.
செயல் அல்லது சாதனம் வகையாக வடிவெடுக்கின்ற அடுத்த வினைச்சொல் தீமஹி. தியானிப்போமாக என்பது இதன் பொருள். ஆத்மசாதனங்களுள் இது தலைசிறந்தது. அஷ்டாங்க யோகத்தில் ஏழாவது அங்கமாக இருப்பது தியானம். இது முதிர்ந்தால் சமாதியாகப் பூர்த்தியாகிறது. காயத்ரி மந்திரத்தைப் பயன்படுத்துகிற பொழுது சிறிது நேரம் தியானம் பண்ணுவது அவசியமாகிறது.

தியானத்துக்காக நிமிர்ந்து உட்காரவேண்டும். சிரசு, கழுத்து, நெஞ்சு ஆகியவை நேராக இருக்கவேண்டும். உள்ளத்தைச் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கின்ற தாமரை மலராகக் கருதவேண்டும். அதில் சுயம் ஜோதி சொரூபமாக வழிபடு தெய்வம் வீற்றிருப்பதாக உணர்தல் வேண்டும். இந்த உணர்வில் நிலைத்திருப்பது தியானமாகிறது. இங்ஙனம் ஐந்து நிமிஷத்துக்குக் குறையாமல் அரைமணி நேரம் வரையில் தியானத்தில் அமர்ந்திருக்க வேண்டும். தியானம் நமது தேசியப் பண்பு. பல்லாயிரம் ஆண்டுகளாக பரதகண்டத்துப் பெருமக்கள் காலையிலும், மாலையிலும் சந்தியா நேரங்களில் ஆழ்ந்து தியானத்திலிருந்து பழகி வந்திருக்கிறார்கள். இந்தப் பண்பில் ஊறியிருப்பதற்கேற்ப ஆன்மிகம் மக்களிடத்து ஓங்குகிறது.

ஈண்டு இயம்பியுள்ள இரண்டு நல்வினைகளுள் ஒன்று நாவால் போற்றுவது;  மற்றது மனத்தால் எண்ணுவது. ஜீவாத்மன் செய்கின்ற செயல்களுள் இவையிரண்டும் பாரமார்த்திகப் பண்பாட்டுக்கு உரியவைகள். ஆத்ம சாதகன் இவ்விரண்டையும் ஊக்கத்தோடு அனுஷ்டுக்கக் கடமைப் பட்டிருக்கிறான்.

ப்ரசோதயாத் என்னும் வினைச்சொல் மூன்றாவதாக வந்தமைகிறது.  தூண்டுகிற என்பது இதன் பொருள். இச்செயல் ஜீவாத்மனுடையதன்று. உள்ளத்தினுள்ளே வீற்றிருக்கின்ற பரமாத்மனுடைய செயல் ஆகின்றது இது. ஜீவாத்மனுடைய செயலுக்குத் துவக்கமும், முடிவும் உண்டு. ஆனால் பரமாத்மனுடைய செயலுக்கோ ஆதி அந்தம் இல்லை. இச்செயலைத் தான் ஆன்றோர்கள் அருள் என்று அழைக்கின்றனர். அருளின் பாங்கு சர்வகாலமும் உள்ளத்தினுள்ளே நிலைபெற்றிருக்கிறது. ஆத்ம போதத்தில் விழிப்படைந்து வருகிறவர்களுக்கு அது விளங்குகிறது. அருளின் பாங்கை உள்ளத்தினுள்ளே உணர்பவனைத் தான் இருபிறப்பாளன் என்று சொல்லவேண்டும். வெறும் உபநயனச் சடங்கால் இந்த உணர்வு உருவெடுக்காது. பரிபாகத்தின் விளைவாகவே இது உருவெடுக்கிறது.
இந்தக் காயத்ரீ மந்திரத்தில் இறைவனுடைய அருளும், ஜீவப் பிரயத்தனமும் இடம் பெற்றிருக்கின்றன. இவ்விரண்டையும் ஒன்று படுத்துவது தான் யோகம். ஆக, பாரமார்த்திகப் பெருவாழ்வுக்குத் தகுதியுடையவர்களே காயத்ரீ மந்திரத்தைச் சரியாகப் பயன்படுத்த வல்லவர்கள் ஆகின்றார்கள்.

காயத்ரீ மந்திரத்தில் மெய்யெழுத்தை நீக்கிவிட்டு உயிரெழுத்தும், உயிர்மெய் எழுத்தும் சேர்ந்து இருபத்து நான்கு அக்ஷரங்கள் இருக்கும். இவை மூன்று வரிகளாகப் பிரிக்கப் பட்டு ஒவ்வொரு வரியிலும் எட்டு எழுத்துக்கள் அமையப் பெற்றிருக்கும். இதுவே காயத்ரீ அமைப்பின் முறைமையாகும். இம்முறைமை வேதங்களில் முக்கிய இடம் பெறுகிறது.
வேதங்களின் உட்கருத்துக்களெல்லாம் காயத்ரீயில் அடங்கியிருக்கின்றன என்பது ஐதிகம். காயத்ரீயில் அடங்கியிருக்கிற கருத்து யாது என்று ஆராய்ந்து பார்க்குமிடத்து, பரம்பொருளுக்கும்,  ஜீவாத்மனுக்கும் இடையில் உள்ள இணக்கத்தை அது ஞாபகமூட்டுகிறது.  ஜீவாத்மனைப் பரமாத்மன் மயமாகப் பண்படுத்துதற்கு அது வழிகாட்டித் தருகிறது. ஆக, ஜீவாத்மன் பரிணமித்து மேலோங்கி வந்து பரமாத்மனைச் சேர்வது குறிக்கோள். இது வேதங்களின் திட்டம். மானுட வாழ்க்கையின் முடிந்த நோக்கம் இதுவேயாம். இந்த நோக்கத்தைச் சுருக்கமாக காயத்ரீ மந்திரம் தெளிவுபடுத்துகிறது. ஆதலால் தான் காயத்ரீ மந்திரத்தை வேதங்களின் சாரம் என்று சான்றோர் சாட்டியிருக்கின்றனர்.

No comments:

Post a Comment