Sunday, November 14, 2010
கதிர்காமக் கந்தா
இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் எல்லாளனை தோற்கடிப்பதற்காக, துட்டகைமுனுவுக்கு கதிர்காமக் கந்தன் உதவியதாக ஒரு பௌத்த-சிங்கள சார்பு சரித்திரக் கதை ஒன்றுண்டு. அந்தக் கதையின் சாராம்சம் இது. தென்னிலங்கையில் துட்ட கைமுனுவின் படை முகாம்களைக் கொண்டிருந்த மாணிக்க கங்கை ஆற்றின் அருகில், கந்தசாமி வள்ளி, தெய்வானை என்ற இரு மனைவியருடன் வாழ்ந்து வந்தார். கி.மு. 3 ம் நூற்றாண்டளவில், இந்தியாவில் இருந்து வந்திருந்த கந்தசாமி, பௌத்த நெறிகளைப் பின்பற்றி துறவியைப் போல வாழ்ந்தவர். மாணிக்க கங்கை பகுதி மக்களின் பிணி தீர்க்க பாடுபட்டவர். கந்தசாமி துட்டகைமுனுவுக்கு வழங்கிய படை நகர்த்தல் தொடர்பான ஆலோசனைகள் எல்லாள மகாராஜாவை வெல்வதற்கு பெரிதும் உதவின. போரில் வென்று இலங்கை தீவு முழுவதற்கும் அரசனான துட்ட கைமுனு, அதற்கு நன்றிக்கடனாக கந்தனுக்கு ஒரு மாளிகை கட்டிக் கொடுத்தான். அதுவே கதிர்காமக் கந்தசுவாமி கோயில். (பார்க்க: The land of God Kataragama )
நிச்சயமாக, இந்து சமயம் சார்ந்த புராணக் கதை இதிலிருந்து வேறுபடுகின்றது. தாய், தந்தையாரான சிவன், பார்வதியுடன் முரண்பட்ட கந்தன் இலங்கை வந்து மாணிக்க கங்கை ஆற்றின் அருகில் வசித்ததாக கூறுகின்றது. முன்னர் குறிப்பிட்ட சரித்திரக்(?) கதையை இந்துத் தமிழர்கள் நம்பப் போவதில்லை. ஆனால் கதிர்காம் இன்று வரை பௌத்த, இந்து மதத்தவர்களுக்கு பொதுவான புனித ஸ்தலமாக உள்ளது. புராதன காலத்தில் இருந்தே கதிர்காம வருடாந்த உற்சவம் நாடு முழுவதும் இருந்து யாத்ரீகர்களை வரவழைக்கின்றது. தொலை தூர யாழ்ப்பாணத்தில் இருந்து கூட பக்தர்கள் நடந்து வருவார்கள். இடையில் முப்பதாண்டுகளாக யுத்தம் காரணமாக அந்த நடைப்பயணம் தடைப்பட்டிருந்தது. கதிர்காமம் தென்னிலங்கையின் வறண்ட பிரதேசமான அம்பாந்தோட்டைக்கு அருகில் அமைந்துள்ளது. துட்ட கைமுனுவின் போருக்கு கந்தசாமி உதவிய கதை எந்தளவு தூரம் உண்மை என்று தெரியாது. ஆனால் சோழ மன்னன் எல்லாளன் இலங்கை முழுவதையும் ஆட்சி செய்த காலத்தில், தென்னிலங்கையில் சிறு நிலப்பகுதி துட்ட கைமுனு தலைமையிலான கிளர்ச்சியாளரின் கட்டுப்பாட்டில் இருந்தது. கதிர்காமமும் அந்த பகுதியை சேர்ந்திருக்க சாத்தியமுண்டு.
பண்டைய காலங்களில், புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்வதற்கும், ஆதிக்க சக்திகளின் ராணுவ வெற்றிக்கும் இடையே தொடர்புண்டு. மெக்காவை சேர்ந்த முகமது தலைமையிலான இஸ்லாமியப் படைகள், அரேபிய தீபகற்பத்தை கைப்பற்றிய பின்னர், மெக்கா நோக்கிய யாத்திரை கட்டாயமாக்கப்பட்டது. கங்கைக் கரையோர பிராமணர்கள் இந்திய உபகண்டத்தை வென்ற பின்னர் தான் காசி யாத்திரை செல்லும் முறை ஏற்பட்டது. அதே போல இலங்கையை ஒரே ஆட்சியின் கீழ் வைத்திருக்க துட்ட கைமுனுவும் கதிர்காமத்தை யாத்திரைத் தலமாக்கியிருக்கலாம். மேலும் இலங்கையின் பூர்வகுடிகளான வேடுவர்களும் கதிர்காமத்தை தமது புனித ஸ்தலமாக கருதுகின்றனர். இதிலிருந்து கதிர்காம வழிபாடு சரித்திர காலத்திற்கு முன்பிருந்தே இருந்து வருவது தெளிவாகின்றது. இன்றைக்கும் கதிர்காமத்தை சுற்றிய பகுதியிலேயே ஆதிவாசிகள் அதிகமாக காணப்படுகின்றனர்.
பிற்காலத்தில் தோன்றிய பௌத்த-சிங்கள தேசியவாதிகள் வரலாற்றை தமக்கேற்ப திரிபு படுத்தி வந்துள்ளனர். அதே வேலையை மறு பக்கத்தில் இந்து-தமிழ் தேசியவாதிகள் செய்து வருகின்றனர். ஆறுபடை வீடு கொண்ட திருமுருகன் என்று குறிப்பிடப்படும், முக்கியமான முருகனின் ஆலயங்களில் கதிர்காமமும் உண்டு. முருகன் தமிழர்களின் கடவுள் என்று சொல்வதிலும் பார்க்க, புராதன தென்னிந்திய இனங்களின் கடவுள் என்று குறிப்பிடுவதே பொருத்தமானது. முருகன் தமிழருக்கு மட்டுமல்ல, கன்னடர்கள், சிங்களவர்களுக்கும் கடவுள் தான். வட இந்தியாவில் இருந்து இந்து (பிராமண) மதம் பரவுவதற்கு முன்பே முருகன் வழிபாடு தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் நிலவி வந்துள்ளது.
கௌதம புத்தர் பிராமண இந்து மதத்திற்கு எதிரான சீர்திருத்த இயக்கம் ஒன்றை ஏற்படுத்தினார். இது யூத மதத்தினுள் இயேசுவின் சீர்திருத்த இயக்கத்துடன் ஒப்பிடத் தக்கது. ஆரம்ப காலத்தில் பௌத்தம் இன்னொரு மதமாக மாறியிருக்கவில்லை. புத்தர் கூட தனது போதனைகளில் கடவுளைப் பற்றி எதுவுமே கூறவில்லை. அதனால் அவரைப் பின்பற்றிய மக்கள் இந்து மதக் கடவுளர்களையே தொடர்ந்தும் வழிபட்டு வந்தார்கள். பௌத்த மதம் நிறுவனப்படுத்தப் பட்ட பின்னரும் அது தொடர்ந்தது. இலங்கையிலும் அதுவே நடந்தது. புத்தரின் போதனைகளை ஏற்றுக் கொண்டவர்கள், பிற இந்துக்களிடம் இருந்து பிரிந்து தம்மை பௌத்தர்கள் என அடையாள படுத்திக் கொண்டனர். துட்ட கைமுனுவும் புத்தரின் போதனைகளை பின்பற்றிய முருக பக்தனாக இருந்திருந்தால் அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. எல்லாளனின் ஆட்சியின் கீழ் பௌத்த சமயத்தை சேர்ந்தவர்களும் வாழ்ந்து வந்துள்ளனர்.
பண்டைய கால அரசர்கள் தமது பிராந்திய விஸ்தரிப்புக்கு வசதியாக மதங்களை பயன்படுத்தி வந்தனர். தென்னிந்தியாவில் தோன்றிய சோழர்கள், பௌத்த, சமண மதங்களை அடக்கி, சைவ மத ஆதிக்கத்தை நிலைநாடினார்கள். பிராமண ஆதிக்கத்தின் கீழான வழிபாட்டு முறைகளையும் அறிமுகப் படுத்தினார்கள். அவர்களின் ஆட்சியின் கீழான கோயில்களில் எல்லாம் பிராமணப் பூசாரிகள் நியமிக்கப்பட்டனர். இலங்கையில் சோழர்கள் வருகையுடன் தான் நிறுவனமயப் படுத்தப் பட்ட பிராமண (இந்து) மதம் பரவியது. அதற்கு முன்னர் இருந்த ஆதி கால இந்துக் கோயில்களில் பிராமணர்கள் பூசாரிகளாக இருக்கவில்லை. இன்றைக்கும் கதிர்காமத்தில் பூசை செய்வது பிராமணர்கள் அல்ல.
துட்ட கைமுனு சிறுவனாக இருந்த பொழுது நடந்ததாக சொல்லப்படும் கதை சிங்கள மொழிப் பாடப் புத்தகத்தில் உள்ளது. “வடக்கே தமிழரும், தெற்கே கடலும் கொந்தளிக்கும் நேரம் நான் எப்படி நிம்மதியாக உறங்க முடியும்?” என்று துட்ட கைமுனு தாயைக் கேட்டானாம். மகா வம்ச நூலில் அந்தக் கதை வருகின்றது. உண்மையில் தமிழர்கள் என்பது சோழர்கள் என்றிருக்க வேண்டும். அன்றைய மனிதர்கள் நம்மைப் போல சிந்திக்கவில்லை. சிங்களவர், தமிழர் என்ற மொழி அடிபடையிலான இன வேறுபாடு பிற்காலத்தில் தோன்றியது. ஆங்கிலேயர்கள் பாளி மொழியில் எழுதப்பட்ட மகா வம்சத்தை சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார்கள். அப்போதே இலங்கையை ஆண்ட தென்னிந்திய அரசர்களை (குறிப்பாக சோழர்களை) தமிழர்கள் என்று விளிக்கும் சொல் புகுத்தப்பட்டது. சிங்கள மன்னர்களுடன் நல்லுறவு பூண்டிருந்த பாண்டிய மன்னர்களும் தமிழர்கள் என்பது இங்கே நினைவுகூரத் தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment