நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த செயல்களும் பழக்க வழக்கங்களும் மிகவும் ஆராய்ந்து அறிவுபூர்வமாக ஏற்படுத்தப்பட்டவையே என்பதையும் நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட மெய்ஞ்ஞானம் தான் இன்றைய விஞ்ஞானம் என்பதை வலியுறுத்துவதையே என் நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரையை வடித்திருக்கிறேன். அப்படி நிரூபிக்க நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட பல நல் வழக்கங்களில் ஒன்றை மட்டும் உதாரணமாக இங்கே எடுத்துக்கொண்டு அலசுகிறேன். இதே போல் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட அனைத்து செயல்களிலும் பழக்கவழக்கங்களிலும் விஞ்ஞானம் கலந்தே இருக்கிறது என்பதை இந்த ஒரு உதாரணத்தினால் விளக்க முற்பட்டிருக்கிறேன்.மெய்ஞ்ஞானம்தான் விஞ்ஞானம், விஞ்ஞானம்தான் மெய்ஞ்ஞானம் என்பதைக் கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று ஒரு சொல் வழக்கு இருக்கிறது, அதைக் கண்ணேறு படுதல் என்று நம் முன்னோர்கள் கூறுவர். அந்த திருஷ்டி கழிய, சுற்றிப் போடுதல் அல்லது திருஷ்டி கழித்தல் என்று ஒரு வழக்கத்தை பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்திருந்தனர் அதை ஆராய்ந்தால் கொஞ்சம் கல் உப்பு எடுத்து அதோடு மிளகாய் வற்றலையும் கையில் வைத்துக்கொண்டு நம்மை நிற்க வைத்து அந்த உப்பை வைத்து நம்மைச் சுற்றிவிட்டு அந்த உப்பையும் காய்ந்த மிளகாயையும் எரிகின்ற நெருப்பில் இடுவார்கள். அந்த உப்பு நெருப்பில் பட்டவுடன் வெடிக்கும்; காய்ந்த மிளகாய் கருகி மிளகாய் நெடி மூக்கைத் தாக்கும். இந்த நிகழ்வில் உப்பும் காய்ந்த மிளகாயும் பஞ்ச பூதங்களாகிய நெருப்பில் இணைந்து ஒரு விதமான ரசாயனக் கலவை ஏற்பட்டு அந்த வேதிய மாற்றம், நமக்கு இருக்கும் வியாதிகளைப் போக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை மட்டுமல்ல; விஞ்ஞானப் பிரகாரம் உப்பும் காய்ந்த மிளகாயும் நெருப்பும் சேர்ந்த கலவையான மணம், நம் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.கொஞ்சம் சுண்ணாம்பு, மஞ்சள் இரண்டையும் பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரில் கலக்கும்போது மஞ்சளும் சுண்ணாம்பும் சேர்ந்து ஒரு சிவப்பு நிறத்தை அந்தத் தண்ணீருக்கு அளிக்கும்; அந்தச் சிவப்புத் தண்ணீர் கலப்பதால் ஏற்படும் வேதிய மாற்ற விளைவுகளால் நம் நோய்கள் தீரும் என்றும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கின்றனர்.அதேபோல இந்த இரண்டு செயல்களிலும் ஏற்படும் வேதிய மாற்றத்தால் விளையும் மணம், பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய காற்றில் கலந்து, நம் நாசியில் புகுந்து நமக்குக் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.அதே போல கிராமங்களில் வீட்டு வாயிலில் மார்கழி மாதங்களில், அல்லது அனைத்து மாதங்களிலுமே சாணம் தெளித்து வைப்பர். பசுமாட்டின் சாணம் ஒரு உயர்தரமான கிருமி நாசினி, இந்தக் கிருமி நாசினி, பசுமாட்டின் சாணத்தைப் பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய பூமியின் மேல் தெளிப்பதால் ஏற்படும் வேதிய மாற்றங்களினால் ஏற்படும் வெளிப்பாடாகிய ஒரு விதமான மணம் கிருமிகளிடமிருந்து ஒரு கவசம் போல் நம்மைக் காக்கிறது.அதே போல பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய ஆகாயத்தில் காற்றின் மூலமாகக் கலந்து ஏற்படும் வேதிய மாற்றங்கள் நம்மை பாதிக்கின்றன, அல்லது காக்கின்றன என்பது எவ்வளவு உண்மை!ஆகாயத்தில் இருக்கும் மேகங்களிலிருந்து பெய்யும் மழை, நமக்கு மிகவும் சுத்தமான குடிநீரையும் அளிக்கிறது; பயிர் செழித்து வளரத் தேவையான இயற்கைச் சத்துகளைப் பூமியிலிருந்து காற்றின் மூலமாகவும், சூரிய வெப்பத்தால் தண்ணீர் நீராவியாக மாறும்போது, அந்த நீர் ஆவியாகி அந்த ஆவியோடு பூமியிலுள்ள இயற்கையான பல சத்துகள் தாமாகவே கலந்து அந்தச் சத்துகளும் நீராவியோடு ஆகாயத்தில் சென்று மேகமாக உருக்கொண்டு, மீண்டும் அங்கே ஏற்படும் குளிர்ச்சியான சூழலால் மழையாக மாறும் வேதியியல் விந்தையால் நீராக, சுத்தமான நீராக மாறி மழையாகப் பொழிகிறது, ஆகவே பஞ்ச பூதங்கள் என்று மெய்ஞ்ஞானிகளாலும் ஐந்து வகை சக்திகள் என்று விஞ்ஞானத்தாலும் ஒப்புக்கொள்ளப்படும் இந்தப் பஞ்ச பூதங்களிலிருந்து உருவாகும் ஜீவராசிகளுக்கு இந்தப் பஞ்ச பூதங்களின் சக்திகள், எப்போதும் உதவுகின்றன என்பதை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்த நம் முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே மக்களுக்கு விஞ்ஞானம் என்று சொன்னால் புரியாது என்றுணர்ந்து விஞ்ஞானத்தையே மெய்ஞ்ஞானம் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கின்றனர் என்பதை எண்ணிப் பார்க்கும் போது, அவர்கள் பாமரர்களா அல்லது விஞ்ஞானம் வளர்ந்த இந்த நிலையிலும் இவை எல்லாவற்றையும் அதாவது நம் மெய்ஞ்ஞானமே விஞ்ஞானம் என்றுணராமல் இருக்கும் நாம் பாமரர்களா என்று எண்ணி வியப்படைகிறேன்.ஆகவே இன்றைய முன்னேற்றமான விஞ்ஞானத்தின் அடிப்படை, அன்றைய மெய்ஞ்ஞானமே என்பது அசைக்க முடியாத உண்மை. மெய்ஞ்ஞானம் எதைக் கடவுள் என்று சொல்லுகிறதோ அந்தக் கடவுளை விஞ்ஞானம் இயற்கை என்று சொல்லுகிறது.இயற்கையோடு இணைந்து வாழ்வோம், அதே நேரத்தில் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த அனைத்து நல் வழக்கங்களையும் பழமை என்று ஒதுக்காமல் அவர்கள் கூறிய மெய்ஞ்ஞானத்தில் அந்தக் காலத்திலேயே எப்படி அவர்கள் அவற்றை முறையாக ஆராய்ந்து, விஞ்ஞானத்தை உட்பொருத்தி வைத்திருந்தனர் என்பதை மீண்டும் ஒரு முறை ஆராய்ந்து அவற்றில் உள்ள நன்மைகளை அடைவோம்.ஆகவே கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த நல் வழக்கங்களையும் இயற்கையையும் நம்பி வாழக் கற்றுக்கொண்டால் நல்லது என்று தோன்றுகிறது.
No comments:
Post a Comment