தமிழ்நாட்டில் சைவம், வைணவம் என்னும் இருபெரும் சமயங்களும் இரண்டு கண்கள் போலச் சிறந்து விளங்குவன. இவ்விரண்டும் பழமையும், பெருமையும் வாய்ந்தவை.
ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியம் எனும் இலக்கண நூலிலேயே,"மாயோன் மேய காடுறை உலகம்" என்று முல்லை நிலத்திற்கு உரிய தெய்வம் "திருமால்" என்பது சிறப்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அதைத் தழுவிப் பிற்காலத்தில் "அங்கண் முல்லையின் தெய்வம் என்று அருந்தமிழ் உரைக்கும் செங்கண் மால்" என்று சேக்கிழார் பெருமானும் வழி மொழிந்துள்ளார்.
"திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேன்" என்று நம்மாழ்வார் பாடுவதற்கு அடிப்படையாக,"மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பில், தாவா விழுப்புகழ் பூவை நிலை" என்று தொல்காப்பியம் விதித்திருத்தலும், திருமால் நெறியின் தொன்மையினை வலியுறுத்தப் போதிய சான்றாகும்.
"சமயக் கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறிப் பொருள் இது" என்று விளக்கிய திருவள்ளுவரும், தாம் எந்த சமயத்தையும் வெளிப்படையாகக் கூறாத இயல்பினராயினும்,"மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகை முடியத் தாவிய சேவடியால்" அளந்த திருமாலைப் பற்றிக் (குறள் - 610) குறிப்பிட்டுள்ளார்.
இன்றைக்கு 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே, சங்க காலத்தில் திருவேங்கடத் திருப்பதியில், வேங்கடேசப் பெருமாள் நின்ற கோலத்தில் விளங்கிக் காட்சி தரும் சிறப்பு, சிலப்பதிகாரத்தில் எழிலுற இனிது விளக்கப்பட்டுள்ளது. இதனால் 2,000 ஆண்டுகளுக்கும் முன்னரே வைணவ சமயம் தமிழ்நாட்டில் தழைத்தோங்கியிருந்த தன்மையும், தொன்மையும் புலனாகின்றன.
முதலாழ்வார்களுள் ஒருவரான பேயாழ்வார், சிவபெருமானும், திருமாலும் பிரிவறக் கலந்து பிணைந்து, இணைந்து, திருவேங்கடமலையின் கண் ஓருருவாய்க் காட்சி தருவதைத் தம் செய்யுளில் இப்படி அழகுறப் பாடி அருளியுள்ளார்:-
"தாழ் சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து."
இப்பாடல் வழி பண்டைக்காலத்தில், தமிழக மக்களிடையில் பரவி, நிலவியிருந்த சைவ - வைணவ சமரச மனப்பான்மை தெளிவுறத் தெரிகிறது. சமயம் மக்களைப் பிரிக்கக் கூடாது. உலகெங்கிலும் உள்ள நல்லறிஞர்கள் பலரும், இந்நாளில் இதனையே பெரிதும் வற்புறுத்தி வருகின்றனர். அத்தகையதொரு சிறந்த நல்விருப்பத்துடனும், குறிக்கோளுடனுமே நம்மாழ்வாரும் - மாணிக்கவாசகரும் வாழ்ந்தார்கள்.
பாண்டிய நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் "திருக்குருகூர்" என்னும் தலத்தில், காரியார் - உடையார்நங்கையார் எனும் தம்பதிக்கு மைந்தராகத் தோன்றியருளினார் நம்மாழ்வார்.
No comments:
Post a Comment