Sunday, November 21, 2010

சில ஆன்மீக குறிப்புகள்

சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால் நவக்கிரகங்கள் திருப்தியடையும்.இதனால், அஷ்டமச்சனி, கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் குறையும்.

· தினமும் ஏதாவது மந்திர ஜபம் செய்துவிட்டு நமது தினசரிக்கடமைகளைத் துவக்கவேண்டும்.அப்படி மந்திர ஜபம் முடிந்த வுடனே ஒரு தம்ளர் இளநீர் அருந்தினால் நாம் ஜபித்த மந்திர அலைகள் நம் உடலுக்கு உள்ளேயே பதிவாகிவிடும்.

· கடலை எண்ணெய் குடும்பத்தில் கலகத்தை உண்டாக்கும்.எனவே, குடும்பத்தில் கடலை எண்ணெயைப் பயன்படுத்துவதை பெருமளவு குறைப்பது நல்லது.

· ஏனெனில், இந்தக் கலகம் குடும்பங்கிளிடையே பரவி, நாடு முழுக்க கலகத்தை உருவாக்கும்.

· பாமாயில்(பனை மர எண்ணெய்) சமையலில் கலந்து சாப்பிட்டால் துர்தேவதைகள் உடலுக்குள் புகுந்துவிடும்.தொடர்ந்து பாமாயில் பயன்படுத்தினால்(சாப்பிட்டால்) நாளாவட்டத்தில் நமது கை கால்களை முடக்கிவிடும்.

· தேங்காய் தொடர்ந்து உண்டால்(அதாங்க இளமுறி எனப்படும் இளம் தேங்காய்) தாது விளையும்.ஈரலுக்கு வலிமை கொடுக்கும்.குடலிலும், வாயிலும் உள்ள புண்களை ஆற்றும்.

· நம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு.வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.

· வீடு மற்றும் தொழிற்சாலைகளில் மற்றவர்கள் விட்ட பெருமூச்சு நீங்க வேண் டுமானால் சாம்பிராணிப்புகை அல்லது 60 வகை மூலிகை சேர்க்கையால் செய்யப்பட்ட மூலிகைப்புகை போடுவது நல்லது.

· நெற்றிச்சுட்டி அறிவுக்கண்ணை(மூன்றாவது கண் நம் எல்லோருக்கும் புருவமத்தியில் இருக்கிறது)த் திறக்கும்.காதணி நல்ல கண்பார்வையைத் தரும்.ஒட்டியாணம் துர் ஆவிகள் பெண்களின் தொப்புள் வழியாக உடலுக்குள் நுழையாமல் தடுக்கும்.

· காலில் அணியும் மிஞ்சி பெண்ணின் காமத்தைக் குறைக்கும்.மூக்குத்தியும் மோதிரமும் சுவாசக்காற்றிலுள்ள விஷகலையை நீக்கும்.

· கோதுமை உணவு சாப்பிடுபவர்கள் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கோதுமை உணவினால் தீமையே(கண் எரிச்சல், மலச்சிக்கல்) ஏற்படும்.

· சுவாதி மற்றும் விசாகம் நட்சத்திரங்கள் நின்ற நாட்களிலும் கடகம் மற்றும் விருச்சிகம் லக்கினங்களிலும் குரு உபதேசம் பெற நன்று.

· கறுப்புத் துணிப் பக்கம் காகம் வருவதில்லை.வெள்ளைத் துணி மற்றும் நீலவெளிச்சத்திற்கு கொசுக்கள் வருவதில்லை.தூய ஆடைகள் பக்கம் கொசு அண்டுவதில்லை.

நம்மாழ்வாரும், மாணிக்கவாசகரும்



தமிழ்நாட்டில் சைவம், வைணவம் என்னும் இருபெரும் சமயங்களும் இரண்டு கண்கள் போலச் சிறந்து விளங்குவன. இவ்விரண்டும் பழமையும், பெருமையும் வாய்ந்தவை.
ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியம் எனும் இலக்கண நூலிலேயே,"மாயோன் மேய காடுறை உலகம்" என்று முல்லை நிலத்திற்கு உரிய தெய்வம் "திருமால்" என்பது சிறப்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அதைத் தழுவிப் பிற்காலத்தில் "அங்கண் முல்லையின் தெய்வம் என்று அருந்தமிழ் உரைக்கும் செங்கண் மால்" என்று சேக்கிழார் பெருமானும் வழி மொழிந்துள்ளார்.
"திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேன்" என்று நம்மாழ்வார் பாடுவதற்கு அடிப்படையாக,"மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பில், தாவா விழுப்புகழ் பூவை நிலை" என்று தொல்காப்பியம் விதித்திருத்தலும், திருமால் நெறியின் தொன்மையினை வலியுறுத்தப் போதிய சான்றாகும்.
"சமயக் கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறிப் பொருள் இது" என்று விளக்கிய திருவள்ளுவரும், தாம் எந்த சமயத்தையும் வெளிப்படையாகக் கூறாத இயல்பினராயினும்,"மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகை முடியத் தாவிய சேவடியால்" அளந்த திருமாலைப் பற்றிக் (குறள் - 610) குறிப்பிட்டுள்ளார்.
இன்றைக்கு 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே, சங்க காலத்தில் திருவேங்கடத் திருப்பதியில், வேங்கடேசப் பெருமாள் நின்ற கோலத்தில் விளங்கிக் காட்சி தரும் சிறப்பு, சிலப்பதிகாரத்தில் எழிலுற இனிது விளக்கப்பட்டுள்ளது. இதனால் 2,000 ஆண்டுகளுக்கும் முன்னரே வைணவ சமயம் தமிழ்நாட்டில் தழைத்தோங்கியிருந்த தன்மையும், தொன்மையும் புலனாகின்றன.
முதலாழ்வார்களுள் ஒருவரான பேயாழ்வார், சிவபெருமானும், திருமாலும் பிரிவறக் கலந்து பிணைந்து, இணைந்து, திருவேங்கடமலையின் கண் ஓருருவாய்க் காட்சி தருவதைத் தம் செய்யுளில் இப்படி அழகுறப் பாடி அருளியுள்ளார்:-
"தாழ் சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து."
இப்பாடல் வழி பண்டைக்காலத்தில், தமிழக மக்களிடையில் பரவி, நிலவியிருந்த சைவ - வைணவ சமரச மனப்பான்மை தெளிவுறத் தெரிகிறது. சமயம் மக்களைப் பிரிக்கக் கூடாது. உலகெங்கிலும் உள்ள நல்லறிஞர்கள் பலரும், இந்நாளில் இதனையே பெரிதும் வற்புறுத்தி வருகின்றனர். அத்தகையதொரு சிறந்த நல்விருப்பத்துடனும், குறிக்கோளுடனுமே நம்மாழ்வாரும் - மாணிக்கவாசகரும் வாழ்ந்தார்கள்.
பாண்டிய நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் "திருக்குருகூர்" என்னும் தலத்தில், காரியார் - உடையார்நங்கையார் எனும் தம்பதிக்கு மைந்தராகத் தோன்றியருளினா
ர் நம்மாழ்வார்.

திருமுறைகள்

திருமுறைகளையும் மெய்கண்ட சாத்திரங்களையும் இந்தி மொழிக்கு மொழிபெயர்க்கும் முயற்சி, கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வருகிற தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.

காசிப் பல்கலைக் கழகத்தில் சிவஞானபோதம் இந்தி மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. அதனைத் தேவாரம் மின்னம்பல தளத்தில் சேர்க்க ஆவன செய்துள்ளேன். தட்டச்சாகி வருகிறது.

திருமந்திரம் முழுவதையும் 1997இல் வார்தாவில் காந்தி ஆச்சிரமத்தார் இந்தி மொழிபெயர்ப்பாக வெளியிட்டனர்.

திருமுறைகள் முழுவதையும் மொழிபெயர்க்குமாறு கொல்கத்தா, சாந்திநிகேதனத்தார் 1995இல் சென்னையில் இருந்து பேரா. சுந்தரத்தை அழைத்து, கொல்கத்தாவில் 3 ஆண்டுகள் தங்கவைத்தனர். அவர்,1,4,5,6,7,8 (திருவாசகம்) திருமுறைகளை இந்திக்கு மொழிபெயர்த்தார். அவரை அழைத்த பேராசிரியர் காலமாகிவிடவே, பிறர் ஆர்வம் காட்டாத நிலையில் அவர் சென்னை திரும்பினார்.

திருவாச இந்தி மொழிபெயர்ப்பை அக்காலத்தில் சாந்திநிகேதன் வெளியிட்டது.

சுந்தரர் தோவாரத்தை வார்தா காந்தி ஆச்சிரமம் வெளியிட்டது.
4,5,6 திருமுறைகளை பாடலிபுரப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.
1 திருமுறை கையெழுத்துப் படியாக உள்ளது.
11ஆம் திருமுறை திருமுருகாற்றுப்படையைத் திரு பாலசுப்பிரமணியம் செய்து வைத்திருக்கிறார்.

அருட்செல்வர் நா. மகாலிஙகம் பெரிதும் முயன்று, வண்ணப் படம் ஒரு பக்கம் கதை ஒரு பக்கம் வந்த பெரியபுராணம் நூலை இந்தியிலும் பலவேறு மொழிகளிலும் பதிப்பித்துள்ளார்.

பேரா. இரபீந்திரநாதர் சேத்து என்பர் மூலம் திருமுறைகளில் தேர்ந்த பாடல்களை இந்திக்கு மொழிபெயர்க்க, பல தொகுதிகாளாக அருட்செல்வர் நா. மகாலிங்கம் பதிப்பித்துள்ளார். அந்தப் பதிப்பை அக்காலத்தில் குடியரசுத் தலைவர் வெளியிட்டார்.

சித்தர் பழமொழிகள்.



சித்தர்கள் தனியாகப் பழமொழிகள் ஏதும் பாடியவரல்லர். பதினெண் சித்தர்கள் பாடல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்பட்டவைகளை .


பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.
தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.
பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.
உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்.
புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும்.
உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பாம்


1.பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.

உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின் பொருள்.

2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.
உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான். அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். இஃது சூரிய சந்திரர்களுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்.


3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.
சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக காட்சியளிகும். நிலவு தேய்வதும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள்.

4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்
மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.

5. புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்.
ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும். இது ஒரு வட்டச் சுழற்சி.


6. உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பபாம்
விரும்பிப் போனால் விலகிப் போகும். விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது. பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார். மனம் உணருமா?

விஞ்ஞானத்தின் அடிப்படை, மெய்ஞ்ஞானமே

நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த செயல்களும் பழக்க வழக்கங்களும் மிகவும் ஆராய்ந்து அறிவுபூர்வமாக ஏற்படுத்தப்பட்டவையே என்பதையும் நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட மெய்ஞ்ஞானம் தான் இன்றைய விஞ்ஞானம் என்பதை வலியுறுத்துவதையே என் நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரையை வடித்திருக்கிறேன். அப்படி நிரூபிக்க நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட பல நல் வழக்கங்களில் ஒன்றை மட்டும் உதாரணமாக இங்கே எடுத்துக்கொண்டு அலசுகிறேன். இதே போல் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட அனைத்து செயல்களிலும் பழக்கவழக்கங்களிலும் விஞ்ஞானம் கலந்தே இருக்கிறது என்பதை இந்த ஒரு உதாரணத்தினால் விளக்க முற்பட்டிருக்கிறேன்.மெய்ஞ்ஞானம்தான் விஞ்ஞானம், விஞ்ஞானம்தான் மெய்ஞ்ஞானம் என்பதைக் கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று ஒரு சொல் வழக்கு இருக்கிறது, அதைக் கண்ணேறு படுதல் என்று நம் முன்னோர்கள் கூறுவர். அந்த திருஷ்டி கழிய, சுற்றிப் போடுதல் அல்லது திருஷ்டி கழித்தல் என்று ஒரு வழக்கத்தை பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்திருந்தனர் அதை ஆராய்ந்தால் கொஞ்சம் கல் உப்பு எடுத்து அதோடு மிளகாய் வற்றலையும் கையில் வைத்துக்கொண்டு நம்மை நிற்க வைத்து அந்த உப்பை வைத்து நம்மைச் சுற்றிவிட்டு அந்த உப்பையும் காய்ந்த மிளகாயையும் எரிகின்ற நெருப்பில் இடுவார்கள். அந்த உப்பு நெருப்பில் பட்டவுடன் வெடிக்கும்; காய்ந்த மிளகாய் கருகி மிளகாய் நெடி மூக்கைத் தாக்கும். இந்த நிகழ்வில் உப்பும் காய்ந்த மிளகாயும் பஞ்ச பூதங்களாகிய நெருப்பில் இணைந்து ஒரு விதமான ரசாயனக் கலவை ஏற்பட்டு அந்த வேதிய மாற்றம், நமக்கு இருக்கும் வியாதிகளைப் போக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை மட்டுமல்ல; விஞ்ஞானப் பிரகாரம் உப்பும் காய்ந்த மிளகாயும் நெருப்பும் சேர்ந்த கலவையான மணம், நம் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.கொஞ்சம் சுண்ணாம்பு, மஞ்சள் இரண்டையும் பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரில் கலக்கும்போது மஞ்சளும் சுண்ணாம்பும் சேர்ந்து ஒரு சிவப்பு நிறத்தை அந்தத் தண்ணீருக்கு அளிக்கும்; அந்தச் சிவப்புத் தண்ணீர் கலப்பதால் ஏற்படும் வேதிய மாற்ற விளைவுகளால் நம் நோய்கள் தீரும் என்றும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கின்றனர்.அதேபோல இந்த இரண்டு செயல்களிலும் ஏற்படும் வேதிய மாற்றத்தால் விளையும் மணம், பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய காற்றில் கலந்து, நம் நாசியில் புகுந்து நமக்குக் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.அதே போல கிராமங்களில் வீட்டு வாயிலில் மார்கழி மாதங்களில், அல்லது அனைத்து மாதங்களிலுமே சாணம் தெளித்து வைப்பர். பசுமாட்டின் சாணம் ஒரு உயர்தரமான கிருமி நாசினி, இந்தக் கிருமி நாசினி, பசுமாட்டின் சாணத்தைப் பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய பூமியின் மேல் தெளிப்பதால் ஏற்படும் வேதிய மாற்றங்களினால் ஏற்படும் வெளிப்பாடாகிய ஒரு விதமான மணம் கிருமிகளிடமிருந்து ஒரு கவசம் போல் நம்மைக் காக்கிறது.அதே போல பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய ஆகாயத்தில் காற்றின் மூலமாகக் கலந்து ஏற்படும் வேதிய மாற்றங்கள் நம்மை பாதிக்கின்றன, அல்லது காக்கின்றன என்பது எவ்வளவு உண்மை!ஆகாயத்தில் இருக்கும் மேகங்களிலிருந்து பெய்யும் மழை, நமக்கு மிகவும் சுத்தமான குடிநீரையும் அளிக்கிறது; பயிர் செழித்து வளரத் தேவையான இயற்கைச் சத்துகளைப் பூமியிலிருந்து காற்றின் மூலமாகவும், சூரிய வெப்பத்தால் தண்ணீர் நீராவியாக மாறும்போது, அந்த நீர் ஆவியாகி அந்த ஆவியோடு பூமியிலுள்ள இயற்கையான பல சத்துகள் தாமாகவே கலந்து அந்தச் சத்துகளும் நீராவியோடு ஆகாயத்தில் சென்று மேகமாக உருக்கொண்டு, மீண்டும் அங்கே ஏற்படும் குளிர்ச்சியான சூழலால் மழையாக மாறும் வேதியியல் விந்தையால் நீராக, சுத்தமான நீராக மாறி மழையாகப் பொழிகிறது, ஆகவே பஞ்ச பூதங்கள் என்று மெய்ஞ்ஞானிகளாலும் ஐந்து வகை சக்திகள் என்று விஞ்ஞானத்தாலும் ஒப்புக்கொள்ளப்படும் இந்தப் பஞ்ச பூதங்களிலிருந்து உருவாகும் ஜீவராசிகளுக்கு இந்தப் பஞ்ச பூதங்களின் சக்திகள், எப்போதும் உதவுகின்றன என்பதை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்த நம் முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே மக்களுக்கு விஞ்ஞானம் என்று சொன்னால் புரியாது என்றுணர்ந்து விஞ்ஞானத்தையே மெய்ஞ்ஞானம் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கின்றனர் என்பதை எண்ணிப் பார்க்கும் போது, அவர்கள் பாமரர்களா அல்லது விஞ்ஞானம் வளர்ந்த இந்த நிலையிலும் இவை எல்லாவற்றையும் அதாவது நம் மெய்ஞ்ஞானமே விஞ்ஞானம் என்றுணராமல் இருக்கும் நாம் பாமரர்களா என்று எண்ணி வியப்படைகிறேன்.ஆகவே இன்றைய முன்னேற்றமான விஞ்ஞானத்தின் அடிப்படை, அன்றைய மெய்ஞ்ஞானமே என்பது அசைக்க முடியாத உண்மை. மெய்ஞ்ஞானம் எதைக் கடவுள் என்று சொல்லுகிறதோ அந்தக் கடவுளை விஞ்ஞானம் இயற்கை என்று சொல்லுகிறது.இயற்கையோடு இணைந்து வாழ்வோம், அதே நேரத்தில் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த அனைத்து நல் வழக்கங்களையும் பழமை என்று ஒதுக்காமல் அவர்கள் கூறிய மெய்ஞ்ஞானத்தில் அந்தக் காலத்திலேயே எப்படி அவர்கள் அவற்றை முறையாக ஆராய்ந்து, விஞ்ஞானத்தை உட்பொருத்தி வைத்திருந்தனர் என்பதை மீண்டும் ஒரு முறை ஆராய்ந்து அவற்றில் உள்ள நன்மைகளை அடைவோம்.ஆகவே கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த நல் வழக்கங்களையும் இயற்கையையும் நம்பி வாழக் கற்றுக்கொண்டால் நல்லது என்று தோன்றுகிறது.

Sunday, November 14, 2010

கதிர்காமக் கந்தா


இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் எல்லாளனை தோற்கடிப்பதற்காக, துட்டகைமுனுவுக்கு கதிர்காமக் கந்தன் உதவியதாக ஒரு பௌத்த-சிங்கள சார்பு சரித்திரக் கதை ஒன்றுண்டு. அந்தக் கதையின் சாராம்சம் இது. தென்னிலங்கையில் துட்ட கைமுனுவின் படை முகாம்களைக் கொண்டிருந்த மாணிக்க கங்கை ஆற்றின் அருகில், கந்தசாமி வள்ளி, தெய்வானை என்ற இரு மனைவியருடன் வாழ்ந்து வந்தார். கி.மு. 3 ம் நூற்றாண்டளவில், இந்தியாவில் இருந்து வந்திருந்த கந்தசாமி, பௌத்த நெறிகளைப் பின்பற்றி துறவியைப் போல வாழ்ந்தவர். மாணிக்க கங்கை பகுதி மக்களின் பிணி தீர்க்க பாடுபட்டவர். கந்தசாமி துட்டகைமுனுவுக்கு வழங்கிய படை நகர்த்தல் தொடர்பான ஆலோசனைகள் எல்லாள மகாராஜாவை வெல்வதற்கு பெரிதும் உதவின. போரில் வென்று இலங்கை தீவு முழுவதற்கும் அரசனான துட்ட கைமுனு, அதற்கு நன்றிக்கடனாக கந்தனுக்கு ஒரு மாளிகை கட்டிக் கொடுத்தான். அதுவே கதிர்காமக் கந்தசுவாமி கோயில். (பார்க்க: The land of God Kataragama )

நிச்சயமாக, இந்து சமயம் சார்ந்த புராணக் கதை இதிலிருந்து வேறுபடுகின்றது. தாய், தந்தையாரான சிவன், பார்வதியுடன் முரண்பட்ட கந்தன் இலங்கை வந்து மாணிக்க கங்கை ஆற்றின் அருகில் வசித்ததாக கூறுகின்றது. முன்னர் குறிப்பிட்ட சரித்திரக்(?) கதையை இந்துத் தமிழர்கள் நம்பப் போவதில்லை. ஆனால் கதிர்காம் இன்று வரை பௌத்த, இந்து மதத்தவர்களுக்கு பொதுவான புனித ஸ்தலமாக உள்ளது. புராதன காலத்தில் இருந்தே கதிர்காம வருடாந்த உற்சவம் நாடு முழுவதும் இருந்து யாத்ரீகர்களை வரவழைக்கின்றது. தொலை தூர யாழ்ப்பாணத்தில் இருந்து கூட பக்தர்கள் நடந்து வருவார்கள். இடையில் முப்பதாண்டுகளாக யுத்தம் காரணமாக அந்த நடைப்பயணம் தடைப்பட்டிருந்தது. கதிர்காமம் தென்னிலங்கையின் வறண்ட பிரதேசமான அம்பாந்தோட்டைக்கு அருகில் அமைந்துள்ளது. துட்ட கைமுனுவின் போருக்கு கந்தசாமி உதவிய கதை எந்தளவு தூரம் உண்மை என்று தெரியாது. ஆனால் சோழ மன்னன் எல்லாளன் இலங்கை முழுவதையும் ஆட்சி செய்த காலத்தில், தென்னிலங்கையில் சிறு நிலப்பகுதி துட்ட கைமுனு தலைமையிலான கிளர்ச்சியாளரின் கட்டுப்பாட்டில் இருந்தது. கதிர்காமமும் அந்த பகுதியை சேர்ந்திருக்க சாத்தியமுண்டு.

பண்டைய காலங்களில், புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்வதற்கும், ஆதிக்க சக்திகளின் ராணுவ வெற்றிக்கும் இடையே தொடர்புண்டு. மெக்காவை சேர்ந்த முகமது தலைமையிலான இஸ்லாமியப் படைகள், அரேபிய தீபகற்பத்தை கைப்பற்றிய பின்னர், மெக்கா நோக்கிய யாத்திரை கட்டாயமாக்கப்பட்டது. கங்கைக் கரையோர பிராமணர்கள் இந்திய உபகண்டத்தை வென்ற பின்னர் தான் காசி யாத்திரை செல்லும் முறை ஏற்பட்டது. அதே போல இலங்கையை ஒரே ஆட்சியின் கீழ் வைத்திருக்க துட்ட கைமுனுவும் கதிர்காமத்தை யாத்திரைத் தலமாக்கியிருக்கலாம். மேலும் இலங்கையின் பூர்வகுடிகளான வேடுவர்களும் கதிர்காமத்தை தமது புனித ஸ்தலமாக கருதுகின்றனர். இதிலிருந்து கதிர்காம வழிபாடு சரித்திர காலத்திற்கு முன்பிருந்தே இருந்து வருவது தெளிவாகின்றது. இன்றைக்கும் கதிர்காமத்தை சுற்றிய பகுதியிலேயே ஆதிவாசிகள் அதிகமாக காணப்படுகின்றனர்.

பிற்காலத்தில் தோன்றிய பௌத்த-சிங்கள தேசியவாதிகள் வரலாற்றை தமக்கேற்ப திரிபு படுத்தி வந்துள்ளனர். அதே வேலையை மறு பக்கத்தில் இந்து-தமிழ் தேசியவாதிகள் செய்து வருகின்றனர். ஆறுபடை வீடு கொண்ட திருமுருகன் என்று குறிப்பிடப்படும், முக்கியமான முருகனின் ஆலயங்களில் கதிர்காமமும் உண்டு. முருகன் தமிழர்களின் கடவுள் என்று சொல்வதிலும் பார்க்க, புராதன தென்னிந்திய இனங்களின் கடவுள் என்று குறிப்பிடுவதே பொருத்தமானது. முருகன் தமிழருக்கு மட்டுமல்ல, கன்னடர்கள், சிங்களவர்களுக்கும் கடவுள் தான். வட இந்தியாவில் இருந்து இந்து (பிராமண) மதம் பரவுவதற்கு முன்பே முருகன் வழிபாடு தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் நிலவி வந்துள்ளது.
கௌதம புத்தர் பிராமண இந்து மதத்திற்கு எதிரான சீர்திருத்த இயக்கம் ஒன்றை ஏற்படுத்தினார். இது யூத மதத்தினுள் இயேசுவின் சீர்திருத்த இயக்கத்துடன் ஒப்பிடத் தக்கது. ஆரம்ப காலத்தில் பௌத்தம் இன்னொரு மதமாக மாறியிருக்கவில்லை. புத்தர் கூட தனது போதனைகளில் கடவுளைப் பற்றி எதுவுமே கூறவில்லை. அதனால் அவரைப் பின்பற்றிய மக்கள் இந்து மதக் கடவுளர்களையே தொடர்ந்தும் வழிபட்டு வந்தார்கள். பௌத்த மதம் நிறுவனப்படுத்தப் பட்ட பின்னரும் அது தொடர்ந்தது. இலங்கையிலும் அதுவே நடந்தது. புத்தரின் போதனைகளை ஏற்றுக் கொண்டவர்கள், பிற இந்துக்களிடம் இருந்து பிரிந்து தம்மை பௌத்தர்கள் என அடையாள படுத்திக் கொண்டனர். துட்ட கைமுனுவும் புத்தரின் போதனைகளை பின்பற்றிய முருக பக்தனாக இருந்திருந்தால் அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. எல்லாளனின் ஆட்சியின் கீழ் பௌத்த சமயத்தை சேர்ந்தவர்களும் வாழ்ந்து வந்துள்ளனர்.
பண்டைய கால அரசர்கள் தமது பிராந்திய விஸ்தரிப்புக்கு வசதியாக மதங்களை பயன்படுத்தி வந்தனர். தென்னிந்தியாவில் தோன்றிய சோழர்கள், பௌத்த, சமண மதங்களை அடக்கி, சைவ மத ஆதிக்கத்தை நிலைநாடினார்கள். பிராமண ஆதிக்கத்தின் கீழான வழிபாட்டு முறைகளையும் அறிமுகப் படுத்தினார்கள். அவர்களின் ஆட்சியின் கீழான கோயில்களில் எல்லாம் பிராமணப் பூசாரிகள் நியமிக்கப்பட்டனர். இலங்கையில் சோழர்கள் வருகையுடன் தான் நிறுவனமயப் படுத்தப் பட்ட பிராமண (இந்து) மதம் பரவியது. அதற்கு முன்னர் இருந்த ஆதி கால இந்துக் கோயில்களில் பிராமணர்கள் பூசாரிகளாக இருக்கவில்லை. இன்றைக்கும் கதிர்காமத்தில் பூசை செய்வது பிராமணர்கள் அல்ல.

துட்ட கைமுனு சிறுவனாக இருந்த பொழுது நடந்ததாக சொல்லப்படும் கதை சிங்கள மொழிப் பாடப் புத்தகத்தில் உள்ளது. “வடக்கே தமிழரும், தெற்கே கடலும் கொந்தளிக்கும் நேரம் நான் எப்படி நிம்மதியாக உறங்க முடியும்?” என்று துட்ட கைமுனு தாயைக் கேட்டானாம். மகா வம்ச நூலில் அந்தக் கதை வருகின்றது. உண்மையில் தமிழர்கள் என்பது சோழர்கள் என்றிருக்க வேண்டும். அன்றைய மனிதர்கள் நம்மைப் போல சிந்திக்கவில்லை. சிங்களவர், தமிழர் என்ற மொழி அடிபடையிலான இன வேறுபாடு பிற்காலத்தில் தோன்றியது. ஆங்கிலேயர்கள் பாளி மொழியில் எழுதப்பட்ட மகா வம்சத்தை சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார்கள். அப்போதே இலங்கையை ஆண்ட தென்னிந்திய அரசர்களை (குறிப்பாக சோழர்களை) தமிழர்கள் என்று விளிக்கும் சொல் புகுத்தப்பட்டது. சிங்கள மன்னர்களுடன் நல்லுறவு பூண்டிருந்த பாண்டிய மன்னர்களும் தமிழர்கள் என்பது இங்கே நினைவுகூரத் தக்கது.

கந்த சஷ்டி


கந்த சஷ்டி நோன்புபற்றி ஒரு புராண வரலாறுண்டு. பிரம்மாவிற்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தனர். இவர்களுள் தக்கன் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்த போதிலும் இறுதியில் சிவனால் தோற்றுவிக்கப்பெற்ற வீரபத்திரக் கடவுளால் கொல்லப்பட்டார். காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடமிருந்து மேலான சக்தியினைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவாகிய சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப்படுபவர்) ஏவப்பட்ட மாயை என்னும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான். இதனைத் தொடர்ந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடன் கூடிய சூரனும், இரண்டாம், சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்க முகத்துடன் கூடிய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகத்துடன் கூடிய தாரகனும் நான்காம் சாமத்தில் ஆட்டின் உருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடன் கூடிய அசமுகி என்னும் அசுரப் பெண்ணும் பிறந்தனர்.

மாயை காரணமாக தோன்றிய அந்நால்வரும் ஆணவ மிகுதியால் அகங்கார மமகாரம் (செருக்கு)கொண்டு காணப்பட்டனர். இந்நால்வரும் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்தனர். இவர்களின் கடுந்தவத்திற்கு இரங்கிய பரம்பொருள் இவர்கள் முன்தோன்றி வேண்டும் வரங்களை அருள்வதாகக் கூறி என் சக்தி அன்றி வேறு ஒரு சக்தியினால் உங்களை அழிக்க முடியாது என அருளினார். இவ்வரத்தினைப் பெற்ற சூரன் முதலானோர் தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலிட்டு சொல்லொணாத் துன்பங்களைக் கொடுத்து அதர்ம வழியில் ஆட்சி செய்தனர்.

அசுரர்களின் இக்கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள் கைலாயம் சென்று சிவனிடம் முறையிட்டனர். சூரன் முதலான அசுரர்களை அழிப்பதற்காக சிவன் தனது நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் மூலம் ஆறு குழந்தைகளை உருவாக்கினார். அக்குழந்தைகள் சரவணப் பொய்கையில் ஆறு கார்த்திகைப் பண்களால் வளர்க்கப்பட்டு உரிய காலம் வந்ததும் ஆறு குழந்தைகளும் பார்வதி தேவியினால் ஒன்று சேர்க்கப்பட்டு ஆறுமுக சுவாமி எனப் பெயர் பெற்றார். இந்த ஆறுமுகக் கடவுள் சூரனை வதம் செய்யும் போது மாயையினால் மாமரமாக நின்றான். அவனைத் தனது ஞான வேலால் பிளந்து அவனது ஆணவத்தினை அடக்கி சேவலும், மயிலுமாக மாற்றி சேவலை தன் கொடியாகவும் மயிலைத் தன் வாகனமாகவும் கொண்டு சூரனுக்கு சாரூப முத்தியை அருளி ஆட்கொண்டார். இவ்வாறே சிங்க முகன் தாருகன் என்போரின் அகங்கார மமகாரம் அழிக்கப்பட்டு இவர்கள் முறையே அம்பிகையினதும், ஐயனாரினதும் வாகனங்களாகி ஆட்கொள்ளப்பட்டனர். இவ்விரதத்தினை வாழ்க்கையில் எந்நிலையில் உள்ளவர்களும் தமக்கு வேண்டிய வரத்தினைப் பெற அனுஷ்டித்து அவற்றினை பெற்றுக் கொள்ளலாம் என்பது திண்ணம். ""மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்தருளும் ஏரகச் செல்வ'' எனும் வரிகளும் ""எந்த நாளும் ஈரேட்டாய் வாழ்வார்'' எனும் வரி மூலமும் மனித வாழ்க்கைக்குத் தேவையான பதினாறு பேறுகளையும் தரவல்லது என்பதையும் அறியமுடிகின்றது. மேலும் கந்த சஷ்டி கவசம் என்னும் பாடலைப் பாடிய தேவராசன் சுவாமிகள் பல ஆண்டுகளாக மாறாத கொடிய வயிற்று வலியால் பீடிக்கப்பட்டு இருந்த போதிலும் இவ்விரதத்தினை அனுஷ்டித்து முருகன் அருளால் குணமடைந்தார்.