Sunday, November 14, 2010

கதிர்காமக் கந்தா


இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் எல்லாளனை தோற்கடிப்பதற்காக, துட்டகைமுனுவுக்கு கதிர்காமக் கந்தன் உதவியதாக ஒரு பௌத்த-சிங்கள சார்பு சரித்திரக் கதை ஒன்றுண்டு. அந்தக் கதையின் சாராம்சம் இது. தென்னிலங்கையில் துட்ட கைமுனுவின் படை முகாம்களைக் கொண்டிருந்த மாணிக்க கங்கை ஆற்றின் அருகில், கந்தசாமி வள்ளி, தெய்வானை என்ற இரு மனைவியருடன் வாழ்ந்து வந்தார். கி.மு. 3 ம் நூற்றாண்டளவில், இந்தியாவில் இருந்து வந்திருந்த கந்தசாமி, பௌத்த நெறிகளைப் பின்பற்றி துறவியைப் போல வாழ்ந்தவர். மாணிக்க கங்கை பகுதி மக்களின் பிணி தீர்க்க பாடுபட்டவர். கந்தசாமி துட்டகைமுனுவுக்கு வழங்கிய படை நகர்த்தல் தொடர்பான ஆலோசனைகள் எல்லாள மகாராஜாவை வெல்வதற்கு பெரிதும் உதவின. போரில் வென்று இலங்கை தீவு முழுவதற்கும் அரசனான துட்ட கைமுனு, அதற்கு நன்றிக்கடனாக கந்தனுக்கு ஒரு மாளிகை கட்டிக் கொடுத்தான். அதுவே கதிர்காமக் கந்தசுவாமி கோயில். (பார்க்க: The land of God Kataragama )

நிச்சயமாக, இந்து சமயம் சார்ந்த புராணக் கதை இதிலிருந்து வேறுபடுகின்றது. தாய், தந்தையாரான சிவன், பார்வதியுடன் முரண்பட்ட கந்தன் இலங்கை வந்து மாணிக்க கங்கை ஆற்றின் அருகில் வசித்ததாக கூறுகின்றது. முன்னர் குறிப்பிட்ட சரித்திரக்(?) கதையை இந்துத் தமிழர்கள் நம்பப் போவதில்லை. ஆனால் கதிர்காம் இன்று வரை பௌத்த, இந்து மதத்தவர்களுக்கு பொதுவான புனித ஸ்தலமாக உள்ளது. புராதன காலத்தில் இருந்தே கதிர்காம வருடாந்த உற்சவம் நாடு முழுவதும் இருந்து யாத்ரீகர்களை வரவழைக்கின்றது. தொலை தூர யாழ்ப்பாணத்தில் இருந்து கூட பக்தர்கள் நடந்து வருவார்கள். இடையில் முப்பதாண்டுகளாக யுத்தம் காரணமாக அந்த நடைப்பயணம் தடைப்பட்டிருந்தது. கதிர்காமம் தென்னிலங்கையின் வறண்ட பிரதேசமான அம்பாந்தோட்டைக்கு அருகில் அமைந்துள்ளது. துட்ட கைமுனுவின் போருக்கு கந்தசாமி உதவிய கதை எந்தளவு தூரம் உண்மை என்று தெரியாது. ஆனால் சோழ மன்னன் எல்லாளன் இலங்கை முழுவதையும் ஆட்சி செய்த காலத்தில், தென்னிலங்கையில் சிறு நிலப்பகுதி துட்ட கைமுனு தலைமையிலான கிளர்ச்சியாளரின் கட்டுப்பாட்டில் இருந்தது. கதிர்காமமும் அந்த பகுதியை சேர்ந்திருக்க சாத்தியமுண்டு.

பண்டைய காலங்களில், புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்வதற்கும், ஆதிக்க சக்திகளின் ராணுவ வெற்றிக்கும் இடையே தொடர்புண்டு. மெக்காவை சேர்ந்த முகமது தலைமையிலான இஸ்லாமியப் படைகள், அரேபிய தீபகற்பத்தை கைப்பற்றிய பின்னர், மெக்கா நோக்கிய யாத்திரை கட்டாயமாக்கப்பட்டது. கங்கைக் கரையோர பிராமணர்கள் இந்திய உபகண்டத்தை வென்ற பின்னர் தான் காசி யாத்திரை செல்லும் முறை ஏற்பட்டது. அதே போல இலங்கையை ஒரே ஆட்சியின் கீழ் வைத்திருக்க துட்ட கைமுனுவும் கதிர்காமத்தை யாத்திரைத் தலமாக்கியிருக்கலாம். மேலும் இலங்கையின் பூர்வகுடிகளான வேடுவர்களும் கதிர்காமத்தை தமது புனித ஸ்தலமாக கருதுகின்றனர். இதிலிருந்து கதிர்காம வழிபாடு சரித்திர காலத்திற்கு முன்பிருந்தே இருந்து வருவது தெளிவாகின்றது. இன்றைக்கும் கதிர்காமத்தை சுற்றிய பகுதியிலேயே ஆதிவாசிகள் அதிகமாக காணப்படுகின்றனர்.

பிற்காலத்தில் தோன்றிய பௌத்த-சிங்கள தேசியவாதிகள் வரலாற்றை தமக்கேற்ப திரிபு படுத்தி வந்துள்ளனர். அதே வேலையை மறு பக்கத்தில் இந்து-தமிழ் தேசியவாதிகள் செய்து வருகின்றனர். ஆறுபடை வீடு கொண்ட திருமுருகன் என்று குறிப்பிடப்படும், முக்கியமான முருகனின் ஆலயங்களில் கதிர்காமமும் உண்டு. முருகன் தமிழர்களின் கடவுள் என்று சொல்வதிலும் பார்க்க, புராதன தென்னிந்திய இனங்களின் கடவுள் என்று குறிப்பிடுவதே பொருத்தமானது. முருகன் தமிழருக்கு மட்டுமல்ல, கன்னடர்கள், சிங்களவர்களுக்கும் கடவுள் தான். வட இந்தியாவில் இருந்து இந்து (பிராமண) மதம் பரவுவதற்கு முன்பே முருகன் வழிபாடு தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் நிலவி வந்துள்ளது.
கௌதம புத்தர் பிராமண இந்து மதத்திற்கு எதிரான சீர்திருத்த இயக்கம் ஒன்றை ஏற்படுத்தினார். இது யூத மதத்தினுள் இயேசுவின் சீர்திருத்த இயக்கத்துடன் ஒப்பிடத் தக்கது. ஆரம்ப காலத்தில் பௌத்தம் இன்னொரு மதமாக மாறியிருக்கவில்லை. புத்தர் கூட தனது போதனைகளில் கடவுளைப் பற்றி எதுவுமே கூறவில்லை. அதனால் அவரைப் பின்பற்றிய மக்கள் இந்து மதக் கடவுளர்களையே தொடர்ந்தும் வழிபட்டு வந்தார்கள். பௌத்த மதம் நிறுவனப்படுத்தப் பட்ட பின்னரும் அது தொடர்ந்தது. இலங்கையிலும் அதுவே நடந்தது. புத்தரின் போதனைகளை ஏற்றுக் கொண்டவர்கள், பிற இந்துக்களிடம் இருந்து பிரிந்து தம்மை பௌத்தர்கள் என அடையாள படுத்திக் கொண்டனர். துட்ட கைமுனுவும் புத்தரின் போதனைகளை பின்பற்றிய முருக பக்தனாக இருந்திருந்தால் அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. எல்லாளனின் ஆட்சியின் கீழ் பௌத்த சமயத்தை சேர்ந்தவர்களும் வாழ்ந்து வந்துள்ளனர்.
பண்டைய கால அரசர்கள் தமது பிராந்திய விஸ்தரிப்புக்கு வசதியாக மதங்களை பயன்படுத்தி வந்தனர். தென்னிந்தியாவில் தோன்றிய சோழர்கள், பௌத்த, சமண மதங்களை அடக்கி, சைவ மத ஆதிக்கத்தை நிலைநாடினார்கள். பிராமண ஆதிக்கத்தின் கீழான வழிபாட்டு முறைகளையும் அறிமுகப் படுத்தினார்கள். அவர்களின் ஆட்சியின் கீழான கோயில்களில் எல்லாம் பிராமணப் பூசாரிகள் நியமிக்கப்பட்டனர். இலங்கையில் சோழர்கள் வருகையுடன் தான் நிறுவனமயப் படுத்தப் பட்ட பிராமண (இந்து) மதம் பரவியது. அதற்கு முன்னர் இருந்த ஆதி கால இந்துக் கோயில்களில் பிராமணர்கள் பூசாரிகளாக இருக்கவில்லை. இன்றைக்கும் கதிர்காமத்தில் பூசை செய்வது பிராமணர்கள் அல்ல.

துட்ட கைமுனு சிறுவனாக இருந்த பொழுது நடந்ததாக சொல்லப்படும் கதை சிங்கள மொழிப் பாடப் புத்தகத்தில் உள்ளது. “வடக்கே தமிழரும், தெற்கே கடலும் கொந்தளிக்கும் நேரம் நான் எப்படி நிம்மதியாக உறங்க முடியும்?” என்று துட்ட கைமுனு தாயைக் கேட்டானாம். மகா வம்ச நூலில் அந்தக் கதை வருகின்றது. உண்மையில் தமிழர்கள் என்பது சோழர்கள் என்றிருக்க வேண்டும். அன்றைய மனிதர்கள் நம்மைப் போல சிந்திக்கவில்லை. சிங்களவர், தமிழர் என்ற மொழி அடிபடையிலான இன வேறுபாடு பிற்காலத்தில் தோன்றியது. ஆங்கிலேயர்கள் பாளி மொழியில் எழுதப்பட்ட மகா வம்சத்தை சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார்கள். அப்போதே இலங்கையை ஆண்ட தென்னிந்திய அரசர்களை (குறிப்பாக சோழர்களை) தமிழர்கள் என்று விளிக்கும் சொல் புகுத்தப்பட்டது. சிங்கள மன்னர்களுடன் நல்லுறவு பூண்டிருந்த பாண்டிய மன்னர்களும் தமிழர்கள் என்பது இங்கே நினைவுகூரத் தக்கது.

கந்த சஷ்டி


கந்த சஷ்டி நோன்புபற்றி ஒரு புராண வரலாறுண்டு. பிரம்மாவிற்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தனர். இவர்களுள் தக்கன் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்த போதிலும் இறுதியில் சிவனால் தோற்றுவிக்கப்பெற்ற வீரபத்திரக் கடவுளால் கொல்லப்பட்டார். காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடமிருந்து மேலான சக்தியினைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவாகிய சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப்படுபவர்) ஏவப்பட்ட மாயை என்னும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான். இதனைத் தொடர்ந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடன் கூடிய சூரனும், இரண்டாம், சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்க முகத்துடன் கூடிய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகத்துடன் கூடிய தாரகனும் நான்காம் சாமத்தில் ஆட்டின் உருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடன் கூடிய அசமுகி என்னும் அசுரப் பெண்ணும் பிறந்தனர்.

மாயை காரணமாக தோன்றிய அந்நால்வரும் ஆணவ மிகுதியால் அகங்கார மமகாரம் (செருக்கு)கொண்டு காணப்பட்டனர். இந்நால்வரும் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்தனர். இவர்களின் கடுந்தவத்திற்கு இரங்கிய பரம்பொருள் இவர்கள் முன்தோன்றி வேண்டும் வரங்களை அருள்வதாகக் கூறி என் சக்தி அன்றி வேறு ஒரு சக்தியினால் உங்களை அழிக்க முடியாது என அருளினார். இவ்வரத்தினைப் பெற்ற சூரன் முதலானோர் தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலிட்டு சொல்லொணாத் துன்பங்களைக் கொடுத்து அதர்ம வழியில் ஆட்சி செய்தனர்.

அசுரர்களின் இக்கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள் கைலாயம் சென்று சிவனிடம் முறையிட்டனர். சூரன் முதலான அசுரர்களை அழிப்பதற்காக சிவன் தனது நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் மூலம் ஆறு குழந்தைகளை உருவாக்கினார். அக்குழந்தைகள் சரவணப் பொய்கையில் ஆறு கார்த்திகைப் பண்களால் வளர்க்கப்பட்டு உரிய காலம் வந்ததும் ஆறு குழந்தைகளும் பார்வதி தேவியினால் ஒன்று சேர்க்கப்பட்டு ஆறுமுக சுவாமி எனப் பெயர் பெற்றார். இந்த ஆறுமுகக் கடவுள் சூரனை வதம் செய்யும் போது மாயையினால் மாமரமாக நின்றான். அவனைத் தனது ஞான வேலால் பிளந்து அவனது ஆணவத்தினை அடக்கி சேவலும், மயிலுமாக மாற்றி சேவலை தன் கொடியாகவும் மயிலைத் தன் வாகனமாகவும் கொண்டு சூரனுக்கு சாரூப முத்தியை அருளி ஆட்கொண்டார். இவ்வாறே சிங்க முகன் தாருகன் என்போரின் அகங்கார மமகாரம் அழிக்கப்பட்டு இவர்கள் முறையே அம்பிகையினதும், ஐயனாரினதும் வாகனங்களாகி ஆட்கொள்ளப்பட்டனர். இவ்விரதத்தினை வாழ்க்கையில் எந்நிலையில் உள்ளவர்களும் தமக்கு வேண்டிய வரத்தினைப் பெற அனுஷ்டித்து அவற்றினை பெற்றுக் கொள்ளலாம் என்பது திண்ணம். ""மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்தருளும் ஏரகச் செல்வ'' எனும் வரிகளும் ""எந்த நாளும் ஈரேட்டாய் வாழ்வார்'' எனும் வரி மூலமும் மனித வாழ்க்கைக்குத் தேவையான பதினாறு பேறுகளையும் தரவல்லது என்பதையும் அறியமுடிகின்றது. மேலும் கந்த சஷ்டி கவசம் என்னும் பாடலைப் பாடிய தேவராசன் சுவாமிகள் பல ஆண்டுகளாக மாறாத கொடிய வயிற்று வலியால் பீடிக்கப்பட்டு இருந்த போதிலும் இவ்விரதத்தினை அனுஷ்டித்து முருகன் அருளால் குணமடைந்தார்.

Thursday, July 29, 2010

ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்:

1. ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ – சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாக.

2. சுத்த பஞ்சாக்ஷரீ – மனோரத இஷ்ட காம்யார்த்த அபிலாக்ஷைகள் நிறைவேற.

3. சிவ அஷ்டாக்ஷரீ - ஸர்வ சத்ரு, மிருக, ரோக உபாதிகள் நீங்க.

4. சிவ பஞ்ச தசாக்ஷரீ – அஷ்ட ஐஸ்வர்யப் பிராப்தி அடைய.

5. சிதம்பர பஞ்சாக்ஷரீ – ஞான வைராக்யம், சிவ கடாக்ஷம் பெற.

6. குரு தாரக பஞ்சாக்ஷரீ – ஸகல ஜன வசீகரணம், ராஜாங்க வெற்றி, தேவதா ப்ரீதி உண்டாக.

7. ம்ருத்யுஞ்ஜய த்ரயக்ஷரீ – அகால, அபம்ருத்யு பயம் நீங்க, ஆயுள் விருத்தியடைய.

8. சிதம்பர சபாநடன மந்த்ரம் – அனைத்து பாப தோஷ பரிகாரம், ரக்ஷா பந்தனம்.

9. நீலகண்ட மந்த்ரம் – எதிர்பாராத கொடிய ஆபத்தினின்று மீளல், தவிர்த்துக் கொள்ள.

10. மஹா நீலகண்ட மந்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம்.

11. த்வனி மந்த்ரம் – மன சாந்தி, சந்தி, சந்துஷ்டி, சிவானந்த அநுபூதி பெற.

12. சிவ காயத்ரீ – நினைவுத்திறன், சமயோசித புத்தி, புதிய யுக்தி, வாக்சாதூர்யம் கூட.

13. மார்கதர்சீ சிவ மந்த்ரம் – பிரயாண சௌகர்யம், எவ்வித ஆபத்துகளும் விபத்துகளும் நேராதிருக்க.

14. ருணமோசன சிவ மந்த்ரம் – கடன் நீங்க, தேவ, பித்ரு ரிஷி கடன் அடைதல், பணவரவு, சேகரிப்பு அதிகரிக்க.

15. பசுபதி காயத்ரீ – ஸகல வித திருஷ்டி விலக, வழக்கில் வெற்றி, குடும்ப மகிழ்ச்சி ஏற்பட.

16. சிவ நவாக்ஷரீ - கார்யா தடைகள், தேக்கநிலை தீர்வு, நிர்வாகத் திறன் கூடுதல், புது முயற்சிகள் பலிதம்.

17. பாசுபதாஸ்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம், ஆபிசார தோஷம், செய்வினைகள் அகல.

18. ருத்ர காயத்ரீ – பாப தோஷ விமோசனம், நிரந்தர ஜயம்.

19. வித்யாப்ரத சிவமந்த்ரம் – புத்திகூர்மை, மேதா விலாஸம், சொல் வசீகரணம், ஸரஸ்வதி கடாக்ஷம் பெற.

20. உமாமஹேஸ்வர மந்த்ரம் – குடும்ப ஒற்றுமை அன்யோன்யம், மட்டற்ற மகிழ்ச்சி, குதூகலம் பெற.

21. ஆபத்துத்தாரக கௌரீவல்லப மந்த்ரம் – எல்லா ஆபத்துக்களும் தடைகளும் நீங்கி, நிரந்தர ஜயம் உண்டாக.

22. ஸர்வபாபஹர பவ மந்த்ரம் – அனைத்து பாப தோஷங்களும், அனாசார பாதிப்பும் விலகுதல்.

23. ரக்ஷாப்ரத கௌரீ சிவ மந்த்ரம் – சீரான உடல் நலம், முகப்பொலிவு, மறுமலர்ச்சி, ஆரோக்கியம் கூடுதல்.

24. ம்ருத் ஸஞ்சீவினி – அகால, அபம்ருத்யு பயம் நீங்கல், ஆயுள் விருத்தி.

25. பஞ்சதசீ சிவ மந்த்ரம் – ஸகல கார்ய சித்தி, செயற்கரிய செயல் செய்தல், வாழ்வில் ஏற்றம்.

26. சுதர்ஸன மந்த்ரம் – செய்வினை, சத்ருக்களின் தொல்லை, வியாபாரத் தடை நீங்குதல், மனச்சாந்தி அடைய.

27. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி.

28. சுதர்ஸன நரஸிம்ஹ மந்த்ரம் – எதிரிகள் தொல்லை, வழக்கு வியாஜ்யம், குடும்ப-தொழில் குழப்பங்கள் நீங்க.

29. வாஸுதேவ மந்த்ரம் – வறுமை, கிலேசம், சந்தேகம், தீவினைகள் அகன்று இம்மை மறுமை நலன்கள் கொழிக்க.

30. விஸ்வரூப மந்த்ரம் – சதுர்வித புருஷார்த்தங்கள், மனோபலம், ஜயம், அசைகள் பூர்த்தியாக.

31. கந்தர்வராஜ மந்த்ரம் – தடை நீங்கி திருமணம், குடும்ப சூழ்நிலைச் சிக்கல்கள் நிவர்த்தி, சுப கார்யங்கள் நடைபெற.

32. ஹயக்ரீவ மந்த்ரம் – புத்தியும் சக்தியும் தூண்டப்படுதல், கல்வியில் ஏற்றம், மஹாவித்வத்வம், இனிய சொல் மெய்யுணர்வு.

33. நாமத்ரயம் – அனைத்து பாப விமோசனம், சுமுக சூழ்நிலை ஏற்பட.

34. சுதர்ஸன அபரோ மந்த்ரம் – ரக்ஷா ப்ரதானம், அடிமன பயம் நீங்குதல், மனநிறைவு, நிம்மதி.

35. நரஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி, நோய் வறுமை நீங்கி ஸகல சம்பத்துகள் அடைய.

36. கருட மந்த்ரம் – விஷம், ஸர்ப்ப தோஷம், துஷ்ட மிருக பயம் விலக.

37. மஹா கருட மந்த்ரம் - அதைர்யம், பாபம், விஷக்ரஹ தோஷங்கள், துஷ்டர் பயம் ஆகியன விலக.

38. தன்வந்த்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை ஏற்பட.

39. கருட காயத்ரீ மந்த்ரம் – தாமதம் நீங்கி எண்ணிய காரியம் முடிதல், சீக்ர கார்யசித்தி பெற.

40. சுதர்ஸன காயத்ரீ மந்த்ரம் – ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் பெற்று சௌகர்யம் ஏற்பட.

41. தன்வந்த்ரீ காயத்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை, மன்மதஸ்வரூபம் ஏற்பட.

42. வித்யா கோபால மந்த்ரம் – வித்யா பிராப்தி, நினைவாற்றல், வாக்குவன்மை, மேதா விலாசம் கூடுதல்.

43. அன்ன கோபால மந்த்ரம் – அன்னபானாதி சம்விருத்தி, தன்னிறைவு பெற.

44. சௌபாக்யலக்ஷ்மீ மந்த்ரம் – லக்ஷ்மி கடாக்ஷம், தாபத்ரய நிவர்த்தி, அஞ்ஞான நிவர்த்தி.

45. க்ஷேத்ர ப்ராப்திகர மந்த்ரம் – பூமி லாபம், குபேர சம்பத்து ஸ்திர லாபம் பெற.

46. க்ஷேத்ர ப்ராப்திகர அபேரா மந்த்ரம் – இந்த்ர பதவி, பொன் விளையும் பூமிக்கு அதிபதி, லோக பிரசித்தி, ஸ்திரத்தன்மை அடைய.

47. த்ருஷ்டி துர்கா மந்த்ரம் – ஸர்வ திருஷ்டி தோஷ பரிகாரம், முன்னேற்றம்.




ஹரிஹர மந்த்ரம்

“ஓம் ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாரயணாய ஓம் ஓம் நமசிவாய

27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்

நட்சத்திரங்கள் -அதிஸ்டம் தரும் தெய்வங்கள்

01. அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி
02. பரணி - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
03. கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
04. ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
05. மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
06. திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்
07. புனர்பூசம் - ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
08. பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
09. ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
10. மகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
11. பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி
12. உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி
13. அத்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி
14. சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
15. சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
16. விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்.
17. அனுசம் - ஸ்ரீ லக்மி நாரயணர்.
18. கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
19. மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்
20. பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
21. உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்.
22. திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
23. அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)
24. சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
25. பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
26. உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
27. ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்.


மேலே குறிப்பிட்டள்ளது ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிஸ்டம் தரக் கூடிய தெய்வங்கள் ஆகும். மேலே தரப்பட்டுள்ள தெய்வங்களின் காயத்திரி மந்திரம், அஸ்டோத்திரம் ஜெபம், அவர்களின் திருக்கோவில் வழிபாடு, அவர்களின் உருவத் தியானம் ஆகியன செய்து வழிபடலாம். இருப்பினும் குல தெய்வ வழிபாடு மிக முக்கியமான வழிபாடாகும். குல தெய்வ வழிபாடிருந்தால் மட்டுமே மற்ற எந்த வழிபாடாயினும் சிறப்பைத் தரும்.

இதனைத் தவிர அவர்அவர்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கிரகமெதுவோ அந்த கிரகத்திற்குரிய அதிதேவதையான தெய்வத்தினையும் வழிபட்டு வாழ்வில் சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம்.


நட்சத்திரங்கள் - கிரகம் - தெய்வம்

1. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன் - சிவன்
2. ரோகிணி, அத்தம், திருவோணம் - சந்திரன் - சக்தி
3. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய் - முருகன்
4. திருவாதிரை, சுவாதி, சதையம் - ராகு - காளி, துரக்;கை
5. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு - தட்சிணாமூர்த்தி
6. பூசம், அனுசம், உத்திரட்டாதி - சனி - சாஸ்தா
7. ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன் - விஷ்ணு
8. மகம், மூலம், அசுவினி - கேது - வினாயகர்
9. பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன் - மகாலக்மி


மேற்கூறிய வழிமுறை இல்வாழ்க்கைக் குறியது

“பிறவிப் பெருங்கடல் நீத்துவர்
நீத்தார் இறைவனடி சேராதவர்”

என்ற திருவள்ளுவரின் வாக்குப்படி இறைவன் அடியினை சேர விரும்புபவர்கள் அதாவது இனியொரு பிறவி வேண்டாம் முத்தீ – மோட்சம் அடைய வேண்டும் என நினைப்பவர்கள் ஜோதிடப்படி 12ம் வீடு, அதற்குரிய கிரகம், அந்த கிரகம் இருக்கும் வீடு, அந்த வீட்டிற்குரிய கிரகம், 12ம் வீட்டினை பார்க்கும் கிரகம், 12ம் வீட்டில் உள்ள கிரகம், 12ம் வீட்டு கிரகத்துடன் சேர்ந்துள்ள கிரகங்கள், 12ம் வீட்டு கிரகத்தினைப் பார்க்கும் கிரகம் என பல தரப்பட்ட வழிகளிலும் ஆராய்ந்து தனக்குரிய வழிபாட்டு முறையினை தேர்ந்தெடுக்க வேண்டும்.

காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?

ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்  இயற்றிய “காயத்ரீ” என்ற நூலில் இருந்து -


காயத்ரி மந்திரம் வருமாறு:


ॐ  भूर्भुवस्सुव:
तत्सवितुर्वरेण्यम्
भर्गो  देवस्य धीमहि ।
धियो यो न: प्रचोदयात् ॥
ஓம் பூர்ப்புவஸ்ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி |
தியோ யோ ந: ப்ரசோதயாத் ||
AUM  bhUrbhuvassuvaH
tat savitur varENyaM
bhargo devasya dhImahi |
dhiyo yo naH prachOdayAt ||


ஓம். யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக.

இது பிரம்ம காயத்ரீ அல்லது சூரிய காயத்ரீ. இதுவே நம் தேசியப் பிரார்த்தனை. இதுவே நம்  தேசிய மந்திரம். பல்லாயிரம் ஆண்டுகளாகக் காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரை இது கையாளப் பட்டு வந்துள்ளது.
ஓம் அல்லது ஓங்காரம் ஓசைகள் அனைத்துக்கும் முதல் காரணம். இது நாதப் பிரம்மம் என்று இயம்பப் பெறுகிறது. பரவஸ்து ஓசை வடிவத்தில் இலங்குகிறது. அகிலாண்டத்தின் இயக்கம் ஓசையை உண்டுபண்ணுகிறது. அந்த ஓசையே ஓங்காரம். ஓங்கார ஓசை இயற்கை முழுவதிலும் ஓவாது ஒலித்துக் கொண்டிருக்கிறது. “ஓவாத சத்தத்து ஒலியே போற்றி” என்று இது போற்றப் படுகிறது. ஓம் என்பது பீஜ மந்திரம். இதன் திரிவுகளாக ஏனைய மந்திரங்கள் வந்துள்ளன. ஓங்காரத்தை உச்சரிப்பதற்கு ஏற்ப மனிதன் மேன்மையுறுகிறான். இயற்கை முழுதுக்கும் பொதுவாக அண்டமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்ற இம்மந்திரத்தை யாரோ சிலர் தான் உச்சரிக்க வேண்டும் என்னும் கட்டுப்பாடு எதற்காக? சுவாசிக்கும் காற்று எல்லார்க்கும் பொதுவாக இருப்பது போன்று இந்த ஓசையும் பொது.
ஓங்காரத்தை உச்சரித்த பிறகே ஏனைய மந்திரங்களை உச்சரிப்பது ஐதிகம். ஏனென்றால் மந்திரங்கள் அனைத்திற்கும் மூலமந்திரமாக அல்லது பீஜமந்திரமாக இருப்பது ஓங்காரம். இதற்கு ஸ்தூல விளக்கம் தருவோம். கணபதி பூஜை பண்ணிய பிறகே ஏனைய தெய்வங்கள் போற்றப் படுகின்றன. கண்பதி ஓங்கார மூர்த்தி. கணபதி வழிபாடு எல்லார்க்கும் சொந்தம். அதினின்றே அவருக்குரிய ஓசை அல்லது மந்திரம் எல்லார்க்கும் பொது என்பது வெளியாகிறது.

பூ: , புவ:, ஸுவ: ஆகிய மூன்று சொற்கள் பூலோகம், புவர்லோகம், ஸ்வர்க்கம் எனப் பொருள்படுகின்றன. இம்மூவுலகங்கள் அகத்திலும் இருக்கின்றன, புறத்திலும் இருக்கின்றன. பண்பாடு அடையாதவர்களுக்கு அம் மூவுலகும் புறத்தில் உள என்னும் கொள்கை ஏற்புடையதாகிறது. அகத்திலேயே அம்மூன்றும் அமைந்துள்ளன என்னும் கொள்கை சிறிது பரிபாகம் அடைந்தவர்களுக்கே விளங்குகிறது.
நம்மிடையே இம்மூவுலகங்களும் எப்படி அமைந்திருக்கின்றன என்று பார்ப்போம். ஜாக்ரதாவஸ்தை, சொப்பனாவஸ்தை, சுஷுப்தி அவஸ்தை ஆகிய மூன்று அவஸ்தைகளும் (நிலைகள்) நம்மிடத்து மாறி மாறி அமைகின்றன. மக்கள் மட்டும் அல்லர்; பறவைகளும், விலங்குகளும் இந்த மூன்று நிலைகளை அனுபவிக்கின்றன.
நனவு அல்லது விழித்திருந்து புறவுலகோடு இணக்கம் வைப்பது ஜாக்ரதாவஸ்தை. நனவு நிலையில் உடல், உள்ளம் ஆகிய இரண்டும் வேலை செய்கின்றன. கனவு என்பது சொப்பனாவஸ்தை. கனவு நிலையில் புறவுலகோடு தொடர்பு வைப்பதில்லை. ஸ்தூல சரீரத்துக்கும் அங்கு வேலையில்லை. அகக் கரணமாகிய மனதே கற்பனையில் ஸ்தூல சரீரத்தையும், புறவுலகத்தையும், அதிலுள்ள உயிர்வகைகளையும் கற்பனை பண்ணிக் கொண்டு வியவகாரம் பண்ணுகிறது.  அந்நிலையில் இருக்கின்ற பொழுது அது யாண்டும் ஜாக்ரதாவஸ்தைக்கு நிகராகத் தோன்றுகின்றது. கனவற்ற உறக்கம் சுஷுப்தி அவஸ்தை எனப்படுகிறது. அந்த அவஸ்தையில் அகவுலகம் இல்லை; புறவுலகம் இல்லை. மனதும் செயலற்றுக் கிடக்கிறது. பிரக்ஞை மட்டும்  தமோகுணத்தால்  [மூவகைக் குணங்களில்  ஒன்றான இருள் இயல்பு] மூடப்பட்டிருப்பது போன்று தன்மயமாய் எஞ்சியிருக்கிறது.
(மூவகைக் குணங்கள் பற்றி அறிய:  பகவத்கீதை - பாரதியார் மொழியாக்கம் அத்தியாயம் 14  பார்க்கவும்)
இம்மூன்று அவஸ்தைகளிலும் நாம் மாறிமாறி இருக்கின்றோம். இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் இந்த மூன்று உலகங்களிலும் சற்று ஏறத்தாழ வசித்து வருகிறோம். இந்த மூன்று அவஸ்தைகளே பூலோகம், புவர்லோகம், ஸுவர்லோகம் என்று இயம்பப் பெறுகின்றன. நாம் எந்த அவஸ்தையில் இருந்தாலும் சரி, அதாவது எந்த லோகத்தில் இருந்தாலும் சரி, இந்த காயத்ரி மந்திரத்தினுடைய கருத்தையுணர்ந்து அதைப் பயன்படுத்திக் கொண்டு வருகிற அளவு ஆன்மிகத் துறையில் முன்னேற்றமடைகிறோம்.
விழித்திருக்கின்ற பொழுது நாம் சுவாசிக்கின்றோம்; கனவு காண்கின்ற பொழுதும் சுவாசிக்கின்றோம்; கனவற்ற உறக்கத்திலும் சுவாசிக்கின்றோம். சுவாசிப்பதை நிறுத்துவதில்லை. நிறுத்தினால் ஒழிந்துபட்டுப் போவோம். நிர்விகல்ப சமாதியில் (அனைத்து உணர்வுகளும் ஒடுங்கும் ஒருமை நிலை) இருப்பவர்கள் மட்டும் சுவாசிக்காதும், அழிந்துபட்டுப் போகாமலும் இருக்கின்றனர். மூன்று அவஸ்தைகளிலும் நிறுத்தாது நாம் சுவாசித்து வருவது போன்று மூன்று அவஸ்தைகளிலும் காயத்ரியில் அடங்கியிருக்கிற கருத்துக்கேற்ப நம்முடைய மனத்தைப் பெரிய நிலையில் வைப்போமானால் அதற்கேற்றவாறு ஆத்ம பரிபாகம் நமக்கு வாய்க்கிறது.

சுஷுப்தி அவஸ்தையில் மனது ஒடுங்குகிறது. ஆதலால் கருத்து ஒன்றும் உருவெடுப்பதில்லை. அந்த அவஸ்தையில் கருத்தை மேல்நிலையில் வைப்பது எங்ஙனம் என்ற கேள்வி எழலாம். சுஷுப்தி அவஸ்தையில் தமோகுணம் ஆதிக்கம் செய்கிறது. தமோகுணத்தில் மூன்று நிலைகள் உண்டு - தமஸில் தமஸ், தமஸில் ரஜஸ், தமஸில் சத்துவம் என அம்மூன்று நிலைகள் விளக்கப் படுகின்றன. ஆத்ம பரிபாகம் அடைந்தவர்கள் தமஸில் சத்துவத்துக்கு மேலோங்க முடியும். அது அறிதுயில் அல்லது யோகநித்திரை எனப்படுகிறது. அந்நிலையை எட்டுகிறவர்கள் காயத்ரீ தத்துவத்தைக் கையாண்டவர்கள் ஆகின்றனர். அந்நிலையை எட்டுவதே குறிக்கோள்.

இனி, ஜாக்ரதாவஸ்தையிலேயே பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் நமக்கு நாம் அமைத்துக் கொள்ள முடியும். உடல் வாழ்க்கையை ஒழுங்காக நடத்துவது பூலோக வாழ்க்கையாகிறது. உள்ளத்தை மேலான எண்ணங்களில் செலுத்துவது புவர்லோகமாகிறது. எண்ணத்தைக் கடவுள் பால் செலுத்துவது ஸ்வர்க்கலோகமாகிறது. அதிகாலையில் எழுந்திருந்து இரவு படுக்கப் போகும் வரையில் வாழ்வாங்கு வாழ்கிற மனிதன் மூவுலகிலும் முறையாக வாழ்ந்தவன் ஆகின்றான்.

இந்த மூன்று லோகங்களிலும் அல்லது மூன்று அவஸ்தைகளிலும் பாரமார்த்திகப் பெருநிலையிலேயே இருந்து பழகுபவன் இரண்டாவது பிறப்பெடுத்தவன் ஆகின்றான். அதற்கு மாறாகப் புலால் உடல் உணர்விலேயே இருந்து புலால் உடலைப் பராமரிப்பதற்காகப் பாடுபடுகிறவன் புலையன் ஆகிறான்.  (ஒப்பிடுக: ”பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்கு” - திருவாசகம்). ஆக, ஒரு மனிதன், இருபிறப்பாளன் ஆவதும் அல்லது ஒரே உடல் பிறவி எடுத்து அதில் கீழ்மையில் உழல்வதும் அந்தந்த ஜீவனுடைய மனபரிபாகத்தை ஒட்டியதாம். இருபிறப்பாளன் அல்லது துவிஜன் யாண்டும் போற்றுதலுக்குரியவன் ஆகின்றான்.
செய்யுள் மயமாக அமைந்துள்ள காயத்ரியில் உள்ள பதங்களை இப்பொழுது உரைநடைக்குரிய பதங்களாகப் பிரித்து அமைப்போம் -

ஓம் தத் ஸவிது: வரேண்யம்
பர்க: தேவஸ்ய தீமஹி |
திய:  ய:  ந: ப்ரசோதயாத் ||
य: ய: - யார், न:  ந: - நம்முடைய, धिय:  திய: அறிவை, प्रचोदयात् ப்ரசோதயாத் - தூண்டுகிறாரோ, तत्  தத் - அந்த, देवस्य தேவஸ்ய - சுடருடைய, सवितु: ஸவிது: கடவுளின், वरेण्यम् வரேண்யம் - மேலான, भर्ग: பர்க: - ஒளியை, धीमहि தீமஹி - தியானிப்போமாக.

ஓம். யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக.

சரியாக அமைந்துள்ள காயத்ரி மந்திரத்தில் பரம்பொருளின் சொரூபத்தை விளக்குவதற்கான பதங்கள் மூன்று அமைந்திருக்கும்.  ஜீவப் பிரயத்தனத்தையும், தெய்வத்தின் அருளையும் விளக்குவதற்கென்று அமைந்துள்ள வினைச்சொற்கள் மூன்று இருக்கும். இப்பேரியல்புகள்  காயத்ரீ மந்திரங்கள் அனைத்துக்குமே பொதுவானவைகள்.

இம்மந்திரத்தில் பரம்பொருளுக்கு விளக்கமாக அமைந்துள்ள மூன்று சொற்களை எடுத்துக் கொள்வோம். ஸவிது: என்னும் சொல் ஸவித்ரு என்னும் சொல்லின் ஆறாம் வேற்றுமையாகும். ஸவித்ரு என்னும் சொல் உயிர்தருகிற, உற்சாகம் ஊட்டுகிற, வாழ்வைச் செப்பனிடுகிற பொருள் என்று சொல்லப் படுகிறது. உலக நடைமுறையில் சூரியன் இச்சொல்லுக்கு இலக்காகிறது. பரதத்துவத்தில் பரமாத்மாவுக்குப் பொருந்தியதாக இப்பதம் அமைகிறது.  ஸவித்ரு  என்னும் சொல்லைப் பெண்பால் ஆக்குகின்ற பொழுது, அது ஸாவித்ரீ என்று சொல்லப் படுகிறது. காயத்ரீ, ஸாவித்ரீ ஆகிய இரண்டு பெயர்களும் சக்தி தெய்வத்துக்கு உரியவைகள் ஆகின்றன. இந்த இரண்டு பெயர்களுள் ஒன்றிற்குப் பதிலாக மற்றொன்றை மொழியுமிடத்து அது இழுக்கு ஆகாது
.
வழிபடுகின்றவர்களுடைய வசதிக்காக ஒரு தெய்வம் ஆண்பாலாகவோ, பெண்பாலாகவோ கருதப் படுகிறது. சிவ என்பது ஆண்பால்; சிவா என்பது பெண்பால். ஸவித்ரு என்பது ஆண்பால்; ஸாவித்ரீ என்பது பெண்பால்.  ஆணாகவோ, பெண்ணாகவோ, அலியாகவோ எப்படி வைத்துக் கொண்டாலும், அது  உயிர்க்கு உயிராய் இருக்கின்ற பரம்பொருள் ஆகிறது  (ஒப்பிடுக: “பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளி சேர், விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி” - திருவாசகம்).

பிரபஞ்சத்துக்கும், ஜீவகோடிகளுக்கும் ஆதாரமாகவும், மூலப் பொருளாகவும், முதல் காரணமாகவும் இருப்பது பரம்பொருள். பரம்பொருளுக்குப் புறம்பாக ஜீவர்களுடைய ஜீவ வியக்தி இல்லை. ஜகத்துக்குத் தோற்றம் என்பது இல்லை. கடலில் தோன்றி, கடலின்மீது அலைகள் உருண்டோடி விளையாடுவது  போன்று ஜகத்தும் ஜீவனும் பரத்தில் தோன்றி பரத்தில் நிலைபெற்றிருக்கின்றன.   (ஒப்பிடுக: தன்னுளே  திரைத்தெழும் தரங்க வெண் தடங்கடல், தன்னுளே திரைத்தெழுந்தடங்குகின்ற தன்மை போல் - நின்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும், நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே :  திருமழிசையாழ்வார், நாலாயிர திவ்யப் பிரபந்தம்).
ஆக, ஜகத்துக்கும் ஜீவனுக்கும் தூண்டுதல் அளிக்கும் பாங்கில் இருக்கிற பரவஸ்து (பரம்பொருள்) ஸவித்ரு என்று சொல்லப் படுகிறது.  கட்புலனாகிற சூரியன் இச்செயலைப் பிரபஞ்ச நிலையில் செய்து வருவதால் சூரிய நாராயணனும் ஸவித்ரு என்று சொல்லப் படுகிறார். ஆனால் இதன் லட்சியார்த்தம் (குறியீட்டுப் பொருள்)  பரமாத்மாவையே குறிக்கிறது.

பரம்பொருளை விளக்குவதற்கு அமைந்துள்ள இரண்டாவது சொல் தேவ: என்பதாகும். தேவஸ்ய என்பது இதன் ஆறாம் வேற்றுமை. தேவ: என்னும் சொல் திவ்யமானவன், பிரகாசமானவன், மேலாம் நிலையில் இருப்பவன் என்றெல்லாம் பொருள் படுகிறது.  பிரகாசத்தோடு கூடியிருப்பது மூலநிலை, யதார்த்த நிலை. பிரகாசத்தை இழந்த நிலை கீழ்மைக்கு வந்துள்ள நிலையாகும். ஜகத்தில் ஜடமாய் இருப்பதெல்லாம் மூலநிலையை விட்டு வழுவிக் கீழ்நிலைக்கு வந்தவைகளாம்.

சான்று ஒன்று எடுத்துக் கொள்வோம். சூரியன் சுயப்பிரகாசம் வாய்ந்தவன். சூரியனிடமிருந்து சிதறி வந்துள்ள பூமியும், சந்திரனும் சுயப்பிரகாசத்தை இழந்தைவைகள். இந்த இரண்டு கோளங்களையும் எடுத்து மீண்டும் சூரியனுள் போட்டால் முன்னிருந்தபடி இவைகளுக்குச் சுயப்பிரகாசம் வந்துவிடும்.  ஜகத் (பருப்பொருள் உலகம்) ஜடமயமாக இருக்கிறது. ஜீவர்களோ ஜடம், சேதனம் (உணர்வு) ஆகிய இரண்டும் கலந்தவைகளாக இருக்கின்றன. பின்பு பரமனோ தனது சுயப் பிரகாசத்தை இழந்துவிடாது யாண்டும் பூரணமாகவே இருப்பவன். தேவ: என்னும் சொல் இப்பேருண்மையை விளக்குகிறது.  பரம்பொருள்  யாண்டும் சுயம்ஜோதி என்பது இதன் பொருள்.

இனி, பரவஸ்துவைக் குறிக்கின்ற மூன்றாவது பதம் பர்க: என்பதாகிறது. பர்க: என்பது ருத்ரனுக்கும், சிவனுக்கும் அமைந்த மற்றொரு பெயர். ருத்ரனாகக் கருதுமிடத்து அழுகையின் வாயிலாக அழுக்கைப் போக்கக் கூடியவன் என்று பொருள்படுகிறது. சிவனாகக் கருதுமிடத்து ஞானப் பிரகாசத்தின் வாயிலாக அக்ஞான இருளைப் போக்குபவன் என்று பொருள்படுகிறது. பரம்பொருளின் சொரூபத்தை ஜீவர்கள் கிரகித்துக் கொள்வதற்கே இந்த அடைமொழி வந்துள்ளது. ஸ்தூல உலகில் சூரியன் தான் இருக்குமிடத்தைத் தானே விளக்குகின்றான்.  தன் வெளிச்சத்தைக் கொண்டு ஏனைய பொருள்களையும் விளக்குகின்றான். அங்ஙனம் ஞான சொரூபியாகிய பரமாத்மா தன்னைத் தானே விளக்குகின்றான். அவனுடைய சன்னிதானத்தின் விசேஷத்தால் ஜகத்தும், ஜீவர்களும் ஞானக்காட்சிக்கு இலக்காகின்றன.

இங்ஙனம் ஸவித்ரு, தேவ:, பர்க: ஆகிய மூன்று சொற்களையும் நாம் உச்சரிக்கின்ற பொழுது, அச்சொற்களுக்கு இலக்காக இருக்கிற பரமாத்மாவையே பாவனை பண்ண வேண்டும். “சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்து” என்பது ஆப்த வாக்கியம். பரமனைப் பற்றிய பதங்களைப் பேசுகின்ற பொழுது, அப்பதங்களின் அடிப்படைக் கருத்து உள்ளத்தில் உதயமாக வேண்டும். அப்பொழுது தான் உச்சரிக்கின்ற மந்திரத்துக்கு வலிவு வருகிறது.

காயத்ரீக்கு இன்றியமையாத மூன்று வினைச்சொற்களை இனி ஆராய்வோம். வரேண்யம் என்பது வர்ணித்தல் எனும் வினையின் விகாரமாம். வரேண்யன் என்னும் சொல் போற்றுதற்குரியது என்றும், வர்ணிப்பதற்குரியது என்றும், விளக்குதற்குரியது என்றும் பொருள்படுகிறது.  தங்கம், வெள்ளி முதலிய தாதுக்களை விளக்க விளக்க அவைகள் சுடர்விடுகின்றன. பரமனை விளக்குவதற்கு ஏற்ப ஜீவாத்மனிடம் ஞானச் சுடர் வளருகிறது. பரமனை விளக்குதலே ஆராதனையாகிறது. பரமனைப் பற்றிய விளக்கத்தைப் “பொருள்சேர் புகழ்” என்று பொய்யாமொழிப் புலவர் வள்ளுவர் போற்றுகிறார். நரஸ்துதி பொருள் சேராத புகழ். பரம்பொருளைப் பற்றிய ஸ்துதி பொருள் சேர்ந்த புகழ். ஆயிரம் ஆயிரமாக சொற்களை வாரிக் கொட்டிப் புகழ்ந்து கொண்டு போனாலும் அதனுடைய புகழுக்கு முடிவில்லை. பரமனை இடையறாது புகழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்னும் கோட்பாட்டை வரேண்யம் என்னும் பதம் விளக்குகிறது.
செயல் அல்லது சாதனம் வகையாக வடிவெடுக்கின்ற அடுத்த வினைச்சொல் தீமஹி. தியானிப்போமாக என்பது இதன் பொருள். ஆத்மசாதனங்களுள் இது தலைசிறந்தது. அஷ்டாங்க யோகத்தில் ஏழாவது அங்கமாக இருப்பது தியானம். இது முதிர்ந்தால் சமாதியாகப் பூர்த்தியாகிறது. காயத்ரி மந்திரத்தைப் பயன்படுத்துகிற பொழுது சிறிது நேரம் தியானம் பண்ணுவது அவசியமாகிறது.

தியானத்துக்காக நிமிர்ந்து உட்காரவேண்டும். சிரசு, கழுத்து, நெஞ்சு ஆகியவை நேராக இருக்கவேண்டும். உள்ளத்தைச் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கின்ற தாமரை மலராகக் கருதவேண்டும். அதில் சுயம் ஜோதி சொரூபமாக வழிபடு தெய்வம் வீற்றிருப்பதாக உணர்தல் வேண்டும். இந்த உணர்வில் நிலைத்திருப்பது தியானமாகிறது. இங்ஙனம் ஐந்து நிமிஷத்துக்குக் குறையாமல் அரைமணி நேரம் வரையில் தியானத்தில் அமர்ந்திருக்க வேண்டும். தியானம் நமது தேசியப் பண்பு. பல்லாயிரம் ஆண்டுகளாக பரதகண்டத்துப் பெருமக்கள் காலையிலும், மாலையிலும் சந்தியா நேரங்களில் ஆழ்ந்து தியானத்திலிருந்து பழகி வந்திருக்கிறார்கள். இந்தப் பண்பில் ஊறியிருப்பதற்கேற்ப ஆன்மிகம் மக்களிடத்து ஓங்குகிறது.

ஈண்டு இயம்பியுள்ள இரண்டு நல்வினைகளுள் ஒன்று நாவால் போற்றுவது;  மற்றது மனத்தால் எண்ணுவது. ஜீவாத்மன் செய்கின்ற செயல்களுள் இவையிரண்டும் பாரமார்த்திகப் பண்பாட்டுக்கு உரியவைகள். ஆத்ம சாதகன் இவ்விரண்டையும் ஊக்கத்தோடு அனுஷ்டுக்கக் கடமைப் பட்டிருக்கிறான்.

ப்ரசோதயாத் என்னும் வினைச்சொல் மூன்றாவதாக வந்தமைகிறது.  தூண்டுகிற என்பது இதன் பொருள். இச்செயல் ஜீவாத்மனுடையதன்று. உள்ளத்தினுள்ளே வீற்றிருக்கின்ற பரமாத்மனுடைய செயல் ஆகின்றது இது. ஜீவாத்மனுடைய செயலுக்குத் துவக்கமும், முடிவும் உண்டு. ஆனால் பரமாத்மனுடைய செயலுக்கோ ஆதி அந்தம் இல்லை. இச்செயலைத் தான் ஆன்றோர்கள் அருள் என்று அழைக்கின்றனர். அருளின் பாங்கு சர்வகாலமும் உள்ளத்தினுள்ளே நிலைபெற்றிருக்கிறது. ஆத்ம போதத்தில் விழிப்படைந்து வருகிறவர்களுக்கு அது விளங்குகிறது. அருளின் பாங்கை உள்ளத்தினுள்ளே உணர்பவனைத் தான் இருபிறப்பாளன் என்று சொல்லவேண்டும். வெறும் உபநயனச் சடங்கால் இந்த உணர்வு உருவெடுக்காது. பரிபாகத்தின் விளைவாகவே இது உருவெடுக்கிறது.
இந்தக் காயத்ரீ மந்திரத்தில் இறைவனுடைய அருளும், ஜீவப் பிரயத்தனமும் இடம் பெற்றிருக்கின்றன. இவ்விரண்டையும் ஒன்று படுத்துவது தான் யோகம். ஆக, பாரமார்த்திகப் பெருவாழ்வுக்குத் தகுதியுடையவர்களே காயத்ரீ மந்திரத்தைச் சரியாகப் பயன்படுத்த வல்லவர்கள் ஆகின்றார்கள்.

காயத்ரீ மந்திரத்தில் மெய்யெழுத்தை நீக்கிவிட்டு உயிரெழுத்தும், உயிர்மெய் எழுத்தும் சேர்ந்து இருபத்து நான்கு அக்ஷரங்கள் இருக்கும். இவை மூன்று வரிகளாகப் பிரிக்கப் பட்டு ஒவ்வொரு வரியிலும் எட்டு எழுத்துக்கள் அமையப் பெற்றிருக்கும். இதுவே காயத்ரீ அமைப்பின் முறைமையாகும். இம்முறைமை வேதங்களில் முக்கிய இடம் பெறுகிறது.
வேதங்களின் உட்கருத்துக்களெல்லாம் காயத்ரீயில் அடங்கியிருக்கின்றன என்பது ஐதிகம். காயத்ரீயில் அடங்கியிருக்கிற கருத்து யாது என்று ஆராய்ந்து பார்க்குமிடத்து, பரம்பொருளுக்கும்,  ஜீவாத்மனுக்கும் இடையில் உள்ள இணக்கத்தை அது ஞாபகமூட்டுகிறது.  ஜீவாத்மனைப் பரமாத்மன் மயமாகப் பண்படுத்துதற்கு அது வழிகாட்டித் தருகிறது. ஆக, ஜீவாத்மன் பரிணமித்து மேலோங்கி வந்து பரமாத்மனைச் சேர்வது குறிக்கோள். இது வேதங்களின் திட்டம். மானுட வாழ்க்கையின் முடிந்த நோக்கம் இதுவேயாம். இந்த நோக்கத்தைச் சுருக்கமாக காயத்ரீ மந்திரம் தெளிவுபடுத்துகிறது. ஆதலால் தான் காயத்ரீ மந்திரத்தை வேதங்களின் சாரம் என்று சான்றோர் சாட்டியிருக்கின்றனர்.

சூரிய நமஸ்காரம்

   ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை நாம் உச்சரிக்கும் போது மூலாதாரத்திலிருந்து நாதம் மேலோங்கி வரும். அதன் பின் ஒவ்வொரு மந்திரத்தையும் நமஸ்காரம் செய்யும் போது உச்சரிக்க வேண்டும்.

சூரியனை முழுமுதல் கடவுளாக நம் முன்னோர்கள் போற்றி வணங்கியுள்ளனர். சங்ககால இலக்கியங்களில் சூரியனே முதற் கடவுளாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி விஞ்ஞான உலகின் ஜீவ நாடியாக உள்ளது. சூரிய உதயத்தைக் கணக்கிட்டுத்தான் ஜாதகப் பலன்களையும் கணிக்கின்றனர். இராகு காலம், எமகண்டம், நல்லநேரம் குறிக்கின்றனர். இதிலிருந்து சூரியனை கடவுளாக வணங்கி வந்தது நமக்கு தெரியவருகிறது. இன்று சூரிய சக்தியை மின்சாரம் முதல் அனைத்திற்கும் பயன்படுத்துகின்றனர். இந்த சூரிய சக்தி மனித உடலுக்கு மிகவும் தேவையான அனைத்து சக்திகளையும் கொடுக்கக் கூடியது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ சூரியனின் அனுக்கிரகம் அவசியத் தேவையாகும்.

பொதுவாக சூரிய ஒளியின் சக்தியானது நமது உடலில் உள்ள சரும நோய்கள், மேக நோய்கள், சித்தபிரமை மற்றும் இரத்த சம்பந்தப்பட்ட நோய்களை நீக்கும் சக்தி கொண்டது. ஆகவே சூரிய பகவானை முறையாக வணங்கி அதன் ஆசியைப் பெறுவோம்.

சூரிய நமஸ்காரம் செய்வதில் இரண்டு வகைகள் உண்டு. முதல் வகையில் 12 நிலைகளும், இரண்டாவது வகையில் 10 நிலைகளும் உள்ளன. இரண்டாவது வகை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் இருக்கும்.

பெண்கள் மாதவிடாய் காலங்களிலும், கர்ப்ப காலங்களிலும் சூரிய நமஸ்காரம் செய்வதை தவிர்ப்பது நல்லது. மேலும் இரத்தக் கொதிப்பு, தண்டுவடப் பிரச்சனை, குடலிறக்க நோயால் பாதிக்கப்பட்டோர் தகுதி வாய்ந்த யோகாசன நிபுணரை கலந்து ஆலோசித்த பின்பே சூரிய நமஸ்காரம்பயிற்சிசெய்யவேண்டும்.


சூரியநமஸ்காரவரிசை


1.நமஸ்காரம்ஆசனம்
2.ஊர்த்துவநமஸ்காரஆசனம்
3.பாதஹஸ்தஆசனம்
4. ஏகபாத பிரசரனா ஆசனம்(வலது கால்)
5.துவிபாதபிரசரனாஆசனம்
6.சாஷ்டாங்கஆசனம்
7.புஜங்காசனம்
8. பூதாராசனம் என ஏறுவரிசையில் எட்டு நிலைகளும்
9. ஏக பாத பிரசரனா ஆசனம் (இடதுகால்)
10.பாதஹஸ்தஆசனம்
11.ஊர்த்துவநமஸ்காரஆசனம்
12.நமஸ்காரஆசனம்

- என இறங்கு வரிசையில் நான்கு நிலைகளும் உள்ளடங்கியதாகும்


ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை நீள ஒலித்து தியானம் செய்து, சூரிய பகவானின் நாமத்தை ஓதி முறையான சுவாசத்தோடு சேர்த்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.





நிலை ஒன்று - நமஸ்கார ஆசனம்

சூரிய நமஸ்காரத்தின் நமஸ்கார ஆசனமே ஆரம்ப நிலையும் முடிவு நிலையும் ஆகும்.




செய்முறை

இரண்டு கால்களின் பெருவிரல்களை ஒன்று சேர்த்து கிழக்கு திசை நோக்கியபடி நிமிர்ந்து நிற்கவேண்டும்.

உள்ளங்கைகளை ஒன்றோடொன்று சேர்த்து, நமஸ்கார முத்திரையில் மார்போடு ஒட்டி, கைகளின் கட்டை விரல்கள் நெஞ்சுக் குழியினை தொடுமாறு வைத்துக்கொள்ள வேண்டும்.

கண்களை மூடி மனதில் சூரிய உதயத்தினை கற்பனை செய்து ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தோடு சூரிய பகவானின் திருநாமத்தை உச்சரிக்க வேண்டும்.




கவனத்தில் கொள்ளவேண்டியவை

கால் பெருவிரல்கள், குதிகால்கள், கால் மூட்டுகள் தொடைகள் நேராக சேர்ந்து இருக்க வேண்டும்.




சுவாசம்

உதடுகளை மூடி சுவாசத்தில் கவனம்செலுத்தி இரண்டு நாசித் துவாரங்கள் வழியாக ஆழமாக மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடவேண்டும்.






பயன்கள்

· இடுப்பு பலமடையும்

· மார்பும், வயிறும் சரியாக அமைய உதவும்.

· நேரான நிமிர்ந்த நன்னடைக்கு வழிவகுக்கும்.

· கண்களும், கண் நரம்புகளும் புத்துணர்வு பெறும்.





சூரிய நமஸ்காரம் தரக்கூடிய நன்மைகளை அதைச் செய்யும் ஒருவர் பெறக்கூடிய மன, உடல் ஆத்ம நலனிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.

புராணங்கள்

புராணங்கள்


இதிகாசங்கள்,வேதங்கள் ஆகியவற்றில் உள்ள நுண்ணிய விஷயங்களையாவரும் புரிந்து கொள்ள கூடிய வகையில் புராணங்கள் விவரிக்கின்றன.''புராணங்கள்'' என்ற சொல்லுக்கு 'மிகப் பழமையானது' என்று பொருள்.சரித்திர காலத்திற்கு முன்பே புராணங்கள் இருந்து வந்துள்ளன.மகா பாரதம், இராமாயணம் போன்ற புராணங்களில் நாம் வாழ்க்கையில் அன்றாடம் கடைப் பிடிக்கத்தக்க விஷயங்கள் மலிந்து கிடக்கின்றன.

ஆதி சங்கரர், பாணர் போன்றவர்கள் தங்கள் நூல்களில் புராணங்களைப் பற்றி கூறுகின்றனர்.
புராணங்களில் 18 சிறிய உபபுராணங்களும் இருப்பதாகக் கூறுகின்றனர்.


விஷ்ணு புராணங்கள் :-

இவை புராணங்களளில் முக்கிய பங்கைப் பிடிக்கின்றன.ஆறு அம்சங்களைக் கொண்ட ஐந்து முக்கிய பிரிவுகளைக் கொண்டவை. முதலாவது அல்லது இரண்டாவது நூற்றாண்டைச் சேர்ந்த விஷ்ணு புராணம் மிகவும் பழையானது.பராசர மகஷிரி, மைத்ரேயருக்கு கற்றுக் கொடுத்ததே கற்றுக் கொடுத்ததே விஷ்ணு புராணமாகும்.

விஷ்ணு புராணத்தை ஆவணி மாதம் பவுர்ணமி அன்று அன்பளிப்பாகத் தாரை வார்த்துக் கொடுத்தால் அவர் விஷ்ணு பதத்தை அடையலாம் என்பது ஐதீகம். விஷ்ணுவின் அவதாரங்கள் பற்றி கூறும் பிரசித்தி பெற்ற பாகவத புராணம் 12 ஸ்கந்தர்களாகப் பிரிக்கப்பட்டு 18000 ஆயிரம் சுலோகங்களைக் கொண்டிருக்கின்றது.

நாராதீய புராணங்கள்:-

இது 25000 ஆயிரம் சுலோங்களளை உள்ளடக்கியது. நாரத மகரிஷி சனத்குமாரருக்கு உபதேசித்ததே நார தீய புராணமாகும்.இந்த புத்தகத்தை ஐப்பசி மாதம்,பவுர்ணமி அன்று அன்பளிப்பாகக் கொடுத்தால்,செழிப்பாக வாழலாம் என்பது ஐதீகம்.

கருட புராணம்:-

விஷ்ணு கருடனுக்கு கூறுவதே கருட புராணமாகும். மருத்துவம்,இலக்கணம்,வான் ஆராய்ச்சி போன்றவற்றை விவரிக்கிறது.மரனத்திற்குப் பின்னர் மனிதன் அடையும் நிலையைப் பற்றியும் கூறுகிறது.8000 ஆயிரம் சுலோகங்களை உள்ளடக்கிய இப்புராணத்தை ஒரு தங்க அன்னப்பட்சியுடன் கொடுத்தால்,செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.



பத்ம புராணம்:-

55000 ஆயிரம் சுலோங்களைக் கொண்டு ஆறு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பிரம்மனின் பத்ம ஆசனத்தைப்பற்றியும் விரிவாகக் கூறுகிறது. இந்தப் புராணத்தை சித்திரை மாதம் ஒரு பசுவுடன் அன்பளிப்பாகக் கொடுத்தால் செழிப்பாக இருக்கலாம் என்பது நம்பிக்கை.

வராக புராணம்:-

விஷ்ணுவின் அவதாரத்தையும் வராகத்தின் கதையையும் விவரிக்கின்றது.14000 ஆயிரம் சுலோங்களைக் கொண்டஇப்புரணத்தை சித்திரை மாதம் ஒரு பசுவுடன் அன்பளிப்பாகக் கொடுத்தால் செழிப்பாக இருக்கலாம் என்பது நம்பிக்கை.

பிரம்ம புராணம்;-

25000 ஆயிரம் சுலோங்களைகளைக் கொண்டது.பிரம்மன் தட்சனுக்குக் கூறியது. வைகாசி மாத பவுர்ணமி அன்று இப்புராணத்தை அன்பளிப்பாக கொடுத்தால் சொர்க்கலோக பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பிரம்மாண்ட புராணம்:-

பிரபஞ்சம் ஒரு தங்கமயமான முட்டையில் இருந்து தோன்றியதாக பிரபஞ்சத்தின் வரலாற்றை கூறுகிறது.இந்நூல் 12000 ஆயிரம் சுலோங்களைக் கொண்ட இந்நூலை ஒரு பிராமணருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தால் மிகவும் நல்லது என்று கூறுகிறது.

பிரும்ம வைவர்த்த புராணம்:-

பிரும்ம காண்டம்,பிரக்ருதி காண்டம்,கணேச காண்டம்,கிருஷ்ண ஜன்ம காண்டம் ஆகியவற்றைக் கொண்டது.18000 சுலோங்களை கொண்ட இப்புராணத்தை இலையுதிர் காலத்தில் அன்பளிப்பாக கொடுப்பது புனிதமானது

மார்க்கண்டேய புராணம்:-

மிகப் பழமையானது. 'தேவி மகாத்மியம்' என்ற பகுதியைக் கொண்டது. கார்த்திகை மாதம்,அமாவாசை அன்று ஒரு பிராமணனுக்கு இந்நூலை அன்பளிப்பாகக் கொடுத்தால், உத்தமம் என்று நமப்படுகிறது.

பவிஷ்ய புராணம்:-

பிற்கால நிகழ்வுகளைப் பற்றி மனுவுக்கு சூரியன் கூறியது.தலங்களைப் பற்றியும் யாத்ரீகர்களின் உரிமைகளைப் பற்றியும் கூறும் இந்நூலை பங்குனி மாத பவுர்ண்மி அன்று பிராமணனுக்கு கொடுத்தால் மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.

வாமன புராணம்:-

விஷ்ணுவின் அனைத்து அவதாரங்களைப் பற்றியும் பார்வதி, பரமேஸ்வரனின் திருமணக் காட்சிகளைப் பற்றியும் விரிவாகக் கூறுகிறது.10,000 சுலோங்களைக் கொண்ட இந்நூலை இலையுதிர் காலத்தில் அன்பளிப்பாக கொடுத்தால் உத்தமம்.

வாயு புராணம்:-

கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாணபட்ட என்பவரைப் பற்றியும் 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குப்த அரசர்களைப் பற்றியும் விரிவாகக் கூறுகிறது. 14000 சுலோகங்களைக் கொண்ட இந்நூலை ஆவணி மாதம் அன்பளிப்பாகக் கொடுத்தால் உத்தமம்.

லிங்க புராணம்.:-

28 விதமான சிவனின் உருவங்களைப் பற்றி கூறுகிறது. 12000 சுலோகங்கள் கொண்ட இந்நூலை பங்குனி மாதம் பவுர்ணமி அன்று பிராமணன் ஒருவனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தால் சிவ சாயுச்சியத்தைப் பெறலாம்.

ஸ்கந்த புராணம்:-

காளிதாசர் இயற்றிய குமார சம்பவம் என்ற நூலுக்கும் அசுரனை வதம் செய்த கந்தனால் கூறப்படும் இந்த புராணத்துக்கும் ப்ல ஒற்றுமைகள் உள்ளன.

அக்னி புராணம்:-

அக்னிதேவன் வசிஷ்டருக்கு உபதேசித்தது.சிவலிங்கம் துர்க்கை,இராமர்,கிருஷ்ணர் ஆகிய அவதாரங்களைப்பற்றி கூறுகிறது.12000 ஆயிரம் சுலோங்களைக் கொண்ட இந்நூல் நாடகம்,சோதிடம்,சிற்பம் போன்ற நுண்கலைகளைப்பற்றியும் கூறுகிறது.

மத்ஸ்ய புராணம்:-

மனுவுக்கு விஷ்ணுவின் அவதாரமான மத்ஸ்யம் கூறுவது இந்நூல்.ஜைனம்,பவுத்தம்,
நாட்டியம்,ஆந்திராஜ வம்சங்கள்ஆகியவற்றை விரிவாக்கிறது. 13000 சுலோகங்கள் கொண்ட இந்நூலை தங்கத்தில் செய்த மீன் உருவத்துடன் அன்பளிப்பாகக் கொடுக்க வேண்டும்.

கூர்ம புராணம்:-

ஆமை வடிவமெடுத்து விஷ்ணு,இந்தரயும்ன்னின் சரித்திரத்தைக் கூறும் விதமாக இந்நூல் அமைகிறது.ஏழு தீவுகள்,ஏழு கடல்கள் ஆகியவை சூழ்ந்த ஜபூத்வீயம் என்ற பரத்தைப் பற்றி விவரிக்கிறது.இந்நூல் 8000 ஆயிரம் சுலோங்கள் கொண்ட இந்நூலை,ஒரு தங்க ஆமை உருவத்துடன் அன்பளிப்பாகக் கொடுத்தால் மிகவும் நல்லது